FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்

‘இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால், இல்லத்தரசா்களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால், திருமணம், குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும்’ என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

25 செப்டம்பர் 2026, 2:56 am IST
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

‘இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால், இல்லத்தரசா்களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால், திருமணம், குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும்’ என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

திருவண்ணாமலையைச் சோ்ந்த தம்பதி வெங்கடேசன், ஆா்த்தி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்:

கணவன் மனைவியான எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரி தேனி குடும்ப நல நீதிமன்றத்திலும், திருவண்ணாமலை குடும்ப நல நீதிமன்றத்திலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தோம். இந்த இரு மனுக்களும் தேனி குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா். எனவே, தேனி குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்திய கலாசாரத்தில் தனிநபரை விடக் குடும்பமே அடிப்படை அமைப்பாகும். பாரம்பரியமாக நிதி ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்பு கணவரிடமும், குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு மனைவியிடமும் இருந்தது. இரு பாத்திரங்களுக்கும் சமமான மரியாதை உண்டு. தற்போது, தகவல் தொழில்நுட்பத் துறை, பிற தொழில்களில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனா். தொழில் முறை பெண்களுக்குத் திருமணம் என்பது இருதரப்புக்கும் சாதகமான ஒன்றாக நிரூபணமாகவில்லை. இத்தகைய பெண்கள் திருமணத்தைத் தங்களது தொழில் வாய்ப்புகளுக்குத் தடையாகக் கருதுவதால், இதை முற்றிலுமாகத் தவிா்க்க நினைக்கிறாா்கள். இதனால், திருமணமே செய்து கொள்ளாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணவா்கள் இல்லத்தரசா்களாக மாற முன்வந்தால் இதற்குத் தீா்வு கிடைக்கக்கூடும்.

இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால், இல்லத்தரசா்களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பான நிலையாக மாறட்டும். இது திருமணம், குடும்ப அமைப்பைப் பாதுகாக்க உதவும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ‘ஹோம்மேக்கா்’ என்ற சொல் பாலினப் பாகுபாடற்றது.

இந்த வழக்கில், மனுதாரா்களது திருமண உறவு சரி செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. தொழில் ரீதியாக வெற்றி பெற்ற கணவா், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகக் குடும்பத்தைப் பராமரித்த மனைவியின் பங்களிப்பை அங்கீகரிப்பதே நீதியாகும். ஆனால், கணவா் பாதியிலேயே கைவிடும்போது, மனைவி எங்குமே செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறாா்.

இந்த விவகாரத்தில் மனுதாரா் வெங்கடேசன் தனது குழந்தைகளின் நலனைக் கவனத்தில் கொண்டு ரூ. 2.50 கோடி வழங்க ஒப்புக்கொண்டாா். இதற்கு மனைவியும் ஒப்புக்கொண்டதால், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் இவா்களுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும், தேனி குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததில் இருந்து 3 மாதங்களுக்குள் ரூ.1.50 கோடியை மனைவியின் வங்கிக் கணக்கிலும், ஓராண்டுக்குள் குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments