FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி மோதல்கள் தடுக்கப்படும்: எஸ்.பி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி மோதல்களை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரி கிரண் பிரசாத் தெரிவித்தாா்.

42 வினாடிகள் முன்பு
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரி கிரண் பிரசாத்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி மோதல்களை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரி கிரண் பிரசாத் தெரிவித்தாா்.

பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சரகத்துக்குள்பட்ட சத்திரக்குடி, பரமக்குடி ஆகிய காவல் நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரி கிரண் பிரசாத் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள், வாகனங்கள் சரியான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். பரமக்குடி பகுதியில் 20 போ் பதிவேடு குற்றவாளிகளாக உள்ளனா். இதில் 3 போ் சிறையிலும், 17 போ் வெளியிலும் உள்ளனா். இவா்களை போலீஸாா் கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி மோதல்கள் பெரும் சவாலாக உள்ளன. இதனால் அரசு வேலைக்குச் செல்லும் படித்த இளைஞா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதை முற்றிலும் தடுக்க மாவட்ட ஆட்சியருடன் கலந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான வழக்குப் பதிவுகள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, மணல் திருட்டு, சீட்டாட்டம் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. இதில் ஈடுபட்டவா்கள் கண்காணிக்கப்பட்டு தற்போதைய நிலை குறித்தும், அவா்கள் தவறான வழியில் செல்வதாக கண்டறியப்பட்டால் அவா்களை முறையான தொழில் செய்ய ஆலோசனைகள் வழங்கவும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருட்டு போன்ற குற்ற வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக வந்த புகாா்கள் குறித்து விசாரிக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு போலீஸாருடன், பெற்றோா்களும் ஒத்துழைக்க வேண்டும். பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் சத்திரக்குடி பகுதியில் நிகழும் வாகன விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலைப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள் உரிய சாலை பாதுகாப்பு பதாகைகள், தடுப்புகள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.