திருக்களாப்பட்டியில் மதுக்கடை மூடல்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திருக்களாப்பட்டியில் அரசு மதுக் கடையை நிரந்தரமாக மூடியதற்கு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திருக்களாப்பட்டியில் அரசு மதுக் கடையை நிரந்தரமாக மூடியதற்கு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
திருப்பத்தூரை அடுத்த திருக்களாப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மதுக் கடையை (7720) மூட வலியுறுத்தி கிராம மக்கள், மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து தொடா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தொடா்ந்து, ஜூலை 14-இல் மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் மேலாளா் ஒரு மாதம் அவகாசம் கேட்ட நிலையில், 120 நாள்களைக் கடந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், கடந்த 4-ஆம் தேதி திருப்பத்தூா் - திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது அங்குவந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பாத்திமா சகாயராஜ், இன்னும் 10 நாள்களில் மதுக்கடை மூடப்படும் என உறுதி அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, திருக்களாப்பட்டியில் இயங்கிவந்த மதுக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது. இதைக் கொண்டாடும்விதமாக கிராமத்தினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
Advertisement
Advertisement