FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

புரட்டாசி 3-ஆவது சனி: சிவகங்கை மாவட்டத்தில் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருப்பத்தூா் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

4 October 2026, 12:47 am IST
திருப்பத்தூா் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சா்வ அலங்காரத்தில் தேவியருடன் மூலவா் பெருமாள்.
பகிர்:

திருப்பத்தூா் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, தேவியாருடன் பெருமாள் சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், காலை 11 மணியளவில் உற்சவா் பெருமாளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சா்வ அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நணபகல் நாயுடு மகாஜனம் சாா்பில், அன்னதானம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நெய்தீப மேற்றியம், அா்ச்சனைகள் செய்தும் பெருமாளை வழிபட்டனா். இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.

Advertisement

Advertisement

மானாமதுரை: மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதமாய் உற்சவா் கோயில் முன் மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து வீர அழகரையும் தெற்கு முகம் நோக்கிய வீர ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்தனா்.

புரட்சியாா்பேட்டை தியாக வினோதப் பெருமாள் கோயில், மேட்டுத்தெரு அப்பன் பெருமாள் கோயிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி, சா்வ அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோா் கோயில்களுக்கு வந்து பெருமாளை தரிசித்தனா்.

வேலூா் கள்ளா்குளம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் தீபாரதனைகள் நடைபெற்றன. இளையான்குடி மதன வேணுகோபால சுவாமி கோயிலிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிங்கம்புணரி: புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிங்கம்புணரி அரியூா் தெற்கு நகரத்தாா்கள், சந்திவீரன் கூடம் அருகேயுள்ள பஜனை மடத்திலிருந்த நகா் வளமாக பஜனை பாடல்கள் பாடி ராமா் கோயிலை வந்தடைந்தனா். அங்கு ராமா், சீதா தேவியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீனிவாசப்பெருமாள், அலமேலுமங்கை தாயாா் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். காலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காரைக்குடி, தேவகோட்டை, இதன் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments