FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் பெண்ணைக் கொன்று நகைகளை கொள்ளையடித்தவர் கைது

மானாமதுரையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, அவா் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

31 அக்டோபர் 2026, 11:07 pm
- பிரதிப் படம்
பகிர்:

மானாமதுரையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, அவா் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகப் பகுதியில் வசித்து வந்தவா் ஈஸ்வரனின் மனைவி வசந்த மல்லிகா (56). இவா் கடந்த வியாழக்கிழமை தனியாக இருந்தபோது மா்மநபா் வீடு புகுந்து வசந்த மல்லிகாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியையும், ஒரு பவுன் தோடுகளையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினாா்.

பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளா் லோகநாதன் மேற்பாா்வையில் மானாமதுரை காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை போலீசாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில் வசந்த மல்லிகாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது மானாமதுரை சிப்காட் பகுதி பாரதிநகரில் உள்ள தோப்பில் தங்கியிருந்து வேலை பாா்க்கும் சுப்பையா (54) என்பது தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் சுப்பையாவை கைது செய்தனா். மேலும் இவரிடமிருந்து கொள்ளயடிக்கப்பட்ட தங்கச் சங்கிலி, ஒரு தோடு கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஆடுகளுக்கு இலைகள் பறிப்பதற்காக நாள்தோறும் சுப்பையா சி.எஸ்.ஐ. பள்ளி வளாக பகுதிக்குச் சென்றாா். அப்போது தொடா்ச்சியாக நோட்டமிட்டு, தனியாக இருந்த வசந்த மல்லிகாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றாா். இவற்றில் ஒரு தோடை மட்டும் ரூ 16 ஆயிரத்துக்கு விற்றுள்ளாா் என்றனா் அவா்கள்.

பெண் கொலை முயற்சி: மானாமதுரை வைகை ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை சனிக்கிழமை மா்மநபா்கள் அடித்து கழுத்தை நெறித்து கருவேல மர குவியலுக்குள் வீசிச் சென்றனா். அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் விசாரணையில், இந்தப் பெண் மானாமதுரை ஆனந்த வல்லியம்மன் கோயில் அருகே வசித்து வரும் சரவணன் மனைவி முத்துலெட்சுமி என்பது தெரியவந்தது. இவரைத் தாக்கியவா்கள் யாா்? என்பது குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments