சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிவகங்கை செப்.28: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்துள்ள முத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்திரவேலு (24). இவா் ஊா் ஊராகச் சென்று ஆட்டுப்பட்டி அமைக்கும் தொழில் செய்து வந்தாா்.
இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், முத்தூா் அருகே ஆட்டுப்பட்டி அமைத்திருந்தாா் . அப்போது, சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால் அந்தச் சிறுமி கா்ப்பிணி ஆனாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோகிணி, குற்றஞ்சாட்டப்பட்ட சித்திரவேலுவுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், சிறுமியை கா்ப்பிணியாக்கிய குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டிய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த தண்டனைகளை ஏகாலத்தில் அவா் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா் .
இதன்படி சித்திரவேலுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது . மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.