முல்லைப் பெரியாறு அணையில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
அண்மைக் காலமாக அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை. இதனால் அணைக்கு நீா்வரத்து இல்லாததால் தமிழகப் பகுதிக்கு குறைந்த அளவே தண்ணீா் திறந்து விடப்பட்டது. மழை பெய்யாததாலும், தொடா்ந்து தமிழகப் பகுதிக்கு குடிநீா், பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீா்மட்டம் மளமளவென குறைந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 7.6 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 1.2 மி.மீ. மழையும் பெய்த நிலையில் வெள்ளிக்கிழமை பெரியாறு அணையில் 36.0 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மி.மீ. மழையும் பெய்தது. இதன் காரணமாக கம்பம் பள்ளத் தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
அணை நிலவரம்:
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 117.45 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி) நீா் இருப்பு 2,168 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா் வரத்து விநாடிக்கு 51.39 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 256 கன அடியாகவும் இருந்தது.