FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கலைஞர்களுக்கு கூடுதல் கௌரவம் அளிக்க நடவடிக்கை: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

காரைக்கால் பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு புதுச்சேரி அரசு கூடுதல் கௌரவம் அளிக்க முதல்வர், கலை பண்பாட்டுத்துறை

30 ஜனவரி 2024, 10:44 pm
பகிர்:

காரைக்கால் பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு புதுச்சேரி அரசு கூடுதல் கௌரவம் அளிக்க முதல்வர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார்.
காரை கலைக்காவலர் கலைக்குழுவின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி காரைக்கால் அம்மையார் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கலைக்குழுவின் நிறுவனரும், கௌரவத் தலைவருமான காரை சுப்பையா, தலைவர் ஏ. சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கி, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேசியது :
கலைகளின் உண்மையான சொரூபம் என்று நாடகத்தைக் குறிப்பிடலாம். புதுச்சேரி மாநிலத்திலேயே பல்வேறு கலைகளைக் கற்றவர்கள் காரைக்காலில் அதிகமானோர் இருக்கிறார்கள். அரசு சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும்போது காரைக்காலைச் சேர்ந்தோருக்கு பிரதிநிதித்துவம் குறைகிறது என சட்டப் பேரவை உறுப்பினர் அசனா தெரிவித்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பகுதியாக  காரைக்கால் விளங்கியபோது, காரைக்கால் பகுதியில் கலை வளர்ச்சி மேம்பட்டது. கலைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் மீதான ஆர்வம் மிகுதியானது.
எனவே, புதுச்சேரி அரசின் சார்பில், கலைஞர்களுக்கு விருது வழங்கும்போது, காரைக்கால் பகுதியினருக்கு கூடுதல் கௌரவம் கிடைக்க முதல்வர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய சுதந்திரத்துக்கு நாடகத்துறையின் பங்களிப்பை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. சுதந்திரத்துக்குப் பின் மத்திய, மாநில அரசுகள் தமது செயல் திட்டங்களை நாடகத்தின் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தின.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு, பசுமைப் புரட்சி, இப்போது தூய்மை இந்தியா திட்டம், திறந்தவெளி மலம் கழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், நாடகம் முக்கிய பங்காற்றுகிறது. தகவல்தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்ட சூழலிலும் நாடகம் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், அதற்கு கலைஞர்களின் ஈடுபாடும், மக்களிடையே நாடகத்தின் மீதான மாறாத உணர்வும்தான் காரணம் என்றார் அமைச்சர்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்திப் பேசினர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கிராமிய நிகழ்ச்சி, நாடகம், வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, சமூக நாடகம் உள்ளிட்டவை அரங்கேறின. காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி இரவு வரை நீடித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments