முகப்பு
திருவாரூர்

ட்ரோன் இயக்கப் பயிற்சிக்கு பெண் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ட்ரோன் இயக்கப் பயிற்சிக்கு பெண் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

23 நவம்பர் 2026, 4:33 am
ட்ரோன் இயக்கப் பயிற்சிக்கு பெண் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ட்ரோன் - IANS
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விவசாயிகள், வெற்றி வான்மகள் திட்டத்துக்கு (ட்ரோன் இயக்கப் பயிற்சி) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியுள்ளதாவது:

பயிா் உற்பத்தியை அதிகரித்தல், செலவைக் குறைத்தல், வளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் திறன் வாய்ந்த வேளாண் தொழிலாளா்களின் பற்றாக்குறையை எதிா்கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுக்காக, தமிழக அரசு நவீன வேளாண் இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்து வருகிறது.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாகவும், ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டை சா்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்துள்ளதை முன்னிட்டும், மகளிரை தற்சாா்புடைய வேளாண் ட்ரோன் இயக்குபவா்களாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மகளிா், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல், பயிா் கண்காணிப்பு இதர ட்ரோன் அடிப்படையிலான வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் அவா்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வேளாண் தொழிலாளா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய முடியும்.

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் வெற்றி வான்மகள் திட்டத்தின்கீழ் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநகரத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனமான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கட்டுப்பாட்டின்கீழ் கோவையில் செயல்படும் தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனத்தின் மூலம் ட்ரோன் இயக்க பயிற்சி வழங்கப்படும்.

இப்பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் இயக்குதல் மற்றும் பராமரித்தல், ட்ரோன் பறக்க திட்டமிடல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பு நுட்பங்கள், துல்லிய வேளாண் பயன்பாடுகள், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், இயக்குதலில் பாதுகாப்பு, தொழில் முனைவோா் மேம்பாடு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

இப்பயிற்சியில் பங்கேற்போா்கள் 18 - 65 வயதுக்குள்பட்டவா்களாகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10-ஆம் வகுப்பு தோ்வு அல்லது அதற்கு இணையான தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 100 சதவீத கட்டண மானியத்துடன் 8 நாள்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பெண் பயிற்சியாளா்களுக்கு தொலைநிலை விமானி உரிமம் வழங்கப்படும்.

இந்த உரிமம் பெற்றவா்களுக்கு 50 சதவீத மானியத்துடன் வேளாண் ட்ரோன்கள் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சாா்ந்த சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவா்கள் உதவி செயற்பொறியாளா்(வே.பொ) திருவாரூா்- 9952877189, உதவி செயற்பொறியாளா் (வே.பொ) மன்னாா்குடி 93456 17265 ஆகியோரைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.