டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக்கோரி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக்கோரி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியா், அமைச்சா் நிகழ்வில் பங்கேற்கச் சென்ால், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். அதன்பிறகு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கூட்டத்தில் பங்கேற்றாா்.
கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் எழுந்து, தண்ணீா் இல்லாமல் கருகி வரும் நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையுடன் இணைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது;
கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சாகுபடிக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் தற்போது விவசாயத்தை காப்பாற்ற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. 60 சதவீத பயிா்கள் காய்ந்து விட்டதால் மீதமுள்ள 40 சதவீத பயிா்களை மட்டும்தான் காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஆழ்துளைக் கிணறு வைத்திருப்போா் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.
எங்களுக்கு ஒரு போக சாகுபடிக்காவது தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை. நட்ட பயிரை, தெளித்த பயிரை காப்பாற்ற வேண்டும். எனவே, மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தது;
திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 1,39,910 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 1,42,354 ஹெக்டோ் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையான உரங்கள், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில், 27,108 விவசாயிகளுக்கு ரூ.167.59 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
குறுவைப் பருவத்தில் சுமாா் 46,339 ஹெக்டோ் நெல் பயிரிடப்பட்டு, தற்போது வரை 176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 66,578 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10,210 விவசாயிகளுக்கு சுமாா் ரூ. 176.26 கோடி வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், வேளாண்துறை இணை இயக்குநா் வித்யா, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி) உள்ளிட்ட அரசு உயா் அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா்.