டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து சிஏஜி ஆய்வு: மாநகராட்சிகள் வரவேற்பு
தில்லி அரசு, உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை, தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆய்வுக்கு உள்படுத்தும் முடிவுக்கு மாநகராட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தில்லி அரசு, உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை, தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆய்வுக்கு உள்படுத்தும் முடிவுக்கு மாநகராட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழு தலைவர் மோகன் பிரசாத் பரத்வாஜ் சனிக்கிழமை கூறியதாவது:
தில்லி அரசு, 3 மாநகராட்சிகள், புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஆகியவை மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை, சிஏஜி ஆய்வுக்கு உள்படுத்தும் முடிவை வரவேற்கிறோம்.
Advertisement
Advertisement
தில்லி 4ஆவது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.700 கோடியை, மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு விடுவிக்காதது, மலேரியா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநகராட்சிகளுக்கு , நிகழாண்டில் வழங்க வேண்டிய சிறப்பு நிதியை விடுவிக்காதது ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் 75 சதவீதத் தொகையை விடுவித்து விட்டதாக, தில்லி அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலேயன்றி வேறொன்றுமில்லை.
இந்த வகையில், வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.37 கோடியில், ரூ.9 கோடியை மட்டுமே அரசு விடுவித்துள்ளது. அதுவும் நீண்ட தாமதத்துக்கு பின்னரே விடுவிக்கப்பட்டது என்றார் மோகன் பிரசாத்.
தெற்கு தில்லி மாநகராட்சியை பொருத்தவரை, ரூ.28.40 கோடியில் ரூ.14 கோடியை மட்டுமே தில்லி அரசு விடுவித்துள்ளது என்று அந்த மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர் ராதே ஷியாம் சர்மா தெரிவித்தார்.
"எங்களுக்கு இதுவரை 50 சதவீத நிதி மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. மாநகராட்சிக்கு ரூ.7 கோடியை விடுவிப்பதாக, கடந்த 9ஆம் தேதி தில்லி அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும், அந்த தொகை இதுவரை கிடைக்கப்பெறவில்லை' என்றார் ராதே ஷியாம் சர்மா.
கிழக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் லதா குப்தா கூறுகையில், "டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தில்லி அரசிடம் ரூ.20 கோடி நிதியை கடந்த ஜூலை மாதமே கேட்டிருந்தோம். ஆனால், எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை' என்றார்.
தில்லியில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,471ஆக அதிகரித்துள்ளது. டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 நெருங்கிவிட்டதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.