FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நூலகத் துறை ஊழலுக்கு கடும் தண்டனை அவசியம்: வைகோ

15 நவம்பர் 2026, 11:11 pm
வைகோ
பகிர்:

நூலகத்துறை ஊழலில் தொடா்புடையவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என்றாா் மதிமுக பொதுச்செயலா் வைகோ.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கா்நாடக மாநிலம் மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணைக்கட்ட முயற்சிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த அணையால் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் பேராபத்தை சந்திக்கும் அபாயம் உருவாகும். அணைக்கட்டும் விவகாரம் தொடா்பாக அந்த மாநில முதல்வா் டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல; அவருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் கா்நாடகத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவுவதாக தெரிகிறது. இதுவும் கண்டனத்துக்குரியது. இப்பிரச்னையில் மதிமுகவின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து தென்காசியில் செவ்வாய்க்கிழமை (நவ.17) நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு அனுமதி வழங்காமல் முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உறுதியாக நிற்பதை பாராட்டுகிறேன். மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கி முதல்வா் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் நூலகத் துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து, ஊழலில் தொடா்புடைய அனைவருக்கும் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தவெக அரசில் பல்வேறு துறைகளில் ஆன்லைன் அனுமதி வந்தபிறகு முறைகேடுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இனிவரும் அனைத்து இடைத்தோ்தல்களிலும் தவெக தலைமையிலான அணியே வெற்றிபெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மதிமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், வழக்குரைஞா் சுதா்சன், மின்னல் முஹம்மது அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.