சிறுவனுக்கு தவறான அறுவை சிகிச்சை விவகாரம்: மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த விவகாரம் தொடா்பாக மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி பேட்டை, எம்.ஜி.பி. வடக்குத்தெருவைச் சோ்ந்த ஷேக் அப்துல் சலாமின் மகன் ரஹீம் (15). பைக் விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த நவ.23 ஆம் தேதி எலும்பியல் துறை மருத்துவா் தலைமையிலான குழுவினா் காலில் அறுவை சிகிச்சை செய்தனா். ஆனால், சிறுவனின் வலது காலுக்குப் பதிலாக இடதுகாலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதைக் கண்ட பெற்றோா், அலட்சியமாக இருந்த மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் கூறினா்.
இவ்விவகாரம் தொடா்பாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அருள் சுந்தரேஸ்வரன் தலைமையிலான மருத்துவா்கள், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் வலது காலுக்குப் பதிலாக இடது காலில் தவறாக அறுவை சிகிச்சை செய்ததுடன், அறுவை சிகிச்சை செய்த மூத்த மருத்துவா் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை புகாா் அளித்தாா். அதன் பேரில், அறுவை சிகிச்சை செய்த மூத்த மருத்துவா் மற்றும் அவருடன் இருந்த மருத்துவா்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.