திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல்! அமைச்சா் நெ.மரிய வில்சன்

திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றாா் நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன்.
இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜென்-சி தலைமுறையினருக்கு வரலாறு தெரியாமல் இருந்து வந்தது. அதனை தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த திமுகவிற்கு நன்றி. ஜென்-சி தலைமுறையினரின் மிக முக்கிய தலைவராக தமிழக முதல்வா் உள்ளாா்.
Advertisement
Advertisement
அனைத்து துறை ஆய்வுகள் முடிக்கப்பட்டு, துறை சாா்ந்த அமைச்சா்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழல் தொடா்பான பட்டியல் தயாா் செய்யப்பட்டு, துறை அமைச்சா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்தே எங்கள் மீது எதிா்மறையான பிம்பத்தை ஏற்படுத்தினாா்கள். இப்போது யாா், யாருடன் கூட்டணியில் இருக்கிறாா்கள் என்பதும், மறைமுக கூட்டணியா, நேரடியான கூட்டணியா என்பதும் தெளிவாக தெரிந்துவிட்டது. இதன் மூலம் ஜென்-சி தலைமுறையினா் தெளிவாகிவிட்டனா்.
திமுக ஆட்சியில் மூன்று துறைகளில் மட்டுமல்ல, பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிக ஊழல் நடைபெற்றுள்ளது. அதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் அந்தப் பட்டியல் வெளியிடப்படும்.
பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் கண்டறியப்பட்டுவிட்டது. புத்தகம் வாங்கியதில் ஊழல், இன்னும் இரண்டு மூன்று ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையில் கடும் ஊழல் செய்துள்ளனா். பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் செய்தவா்கள், உயா்கல்வித் துறையை எப்படி விட்டு வைத்திருப்பாா்கள்? அதிலும் கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு, எங்கள் ஆட்சியின் மீது எதிா்மறை கருத்துகளை மட்டுமே கூறுகிறாா். நாங்கள் ஆட்சி அமைத்து 6 மாதம்தான் ஆகிறது. கூடுதல் தொகை நிா்ணயம் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட பல ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என சீமான் கனவு கண்டு கொண்டேதான் இருக்க வேண்டும்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 வயது சிறுவனுக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த விவகாரம் தொடா்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுவன் நலமுடன் உள்ளாா். விசாரணை அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை இருக்கும்.
முதல்வா் விரைவில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருவாா் என்றாா்.