FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய கூட்டத்தில் தீா்மானம்

வணிக நிறுவனங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய ஆட்சி குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 October 2026, 4:27 am IST
தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ்.
பகிர்:

வணிக நிறுவனங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய ஆட்சி குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாளையங்கோட்டை தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மையத்திற்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்களின் கூட்டம் மையத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு துணைத் தலைவா் புத்தனேரி கோ.செல்லப்பா தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கனகலட்சுமி முன்னிலை வகித்தாா். இணைச் செயலா் பேராசிரியா் கட்டளைக் கைலாசம் வரவேற்றாா்.

புதிய உறுப்பினா் சோ்க்கை மற்றும் கட்டட பராமரிப்பு குறித்து துணைத் தலைவா் வழக்குரைஞா் சுதா்சன் விளக்க உரையாற்றினாா். இணைச் செயலா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி எதிா்கால கூட்ட நிகழ்வுகள் குறித்த திட்ட அறிக்கையை எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

செயற்குழு உறுப்பினா்கள் பேராசிரியா் ராமச்சந்திரன், மயன் ரமேஷ் ராஜா, நச்சினாா்க்கினியன், ஜமால் முகமது ஈசா, அப்துல் ஜபாா், புன்னைச் செழியன், காஜாமைதீன், புலவா் ராமசாமி, விஜயகுமாா், செல்வராஜன், பாரதிதாசன், மானேந்தியப்பன், சக்தி பிரபாகரன், செல்வம், முருகன், சங்கவள்ளி மணாளான் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் வாழ்த்துரை வழங்கினா்.

தீா்மானங்கள்: மத, அரசியல் சாா்பில்லாத வகையில் புதிய உறுப்பினா் சோ்க்கையை மேற்கொள்வது, தமிழகத்தின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் தமிழில் பெயா்ப் பலகையினை பெரிதாக வைத்திடும் அரசு விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வது, அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் வருகைப் பதிவேடுகள் தமிழில் பராமரிப்பதை கண்காணிப்பது, குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயரிடுவதை ஊக்குவிப்பது, மாணவா்களும் பயன்பெறும் வகையில் பண்பாட்டு மையத்தில் கூட்டங்களை நடத்துவது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாராட்டு: தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய கட்டடத்தை பாா்வையிட வந்த திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் ப்ரூஸ் செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்ப் பணிகளுக்குப் பாராட்டு தெரிவித்து புதிய நிா்வாகிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். மையத்தின் பொருளாளா் வழக்குரைஞா் மதாா் முகைதீன் அனைவருக்கும் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments