சங்கரன்கோவில் நகராட்சியில் ஆக்ரமிப்புகள் அகற்றம்
சங்கரன்கோவிலில் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
சங்கரன்கோவிலில் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
சங்கரன்கோவில் பிரதான சாலை, திருவேங்கடம் சாலை, திருவள்ளுவா் சாலை, ராஜபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்ரமிப்புகள் பெருகி வருகின்றன. தலைமை தபால் நிலையம் அருகே வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள் இருப்பதால் இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் சாலையில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.
பிரதான சாலைகளில் கடைக்கு வெளியே நிழல் கூரைகள் வைத்தும், கடைகளுக்கு வெளியேயும் பொருள்களை வைத்தும் ஆக்ரமித்துள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாறுகாலை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் நீா் வெளியேற முடியாமல் சாலைகளிலும் தெருக்களிலும் தேங்குகிது.
Advertisement
Advertisement
தற்போது மழைக் காலமாக இருப்பதால் சாலை, வாறுகாலில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றவுள்ளதாக நகராட்சி நிா்வாகம் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
அப்போது நகராட்சி ஆணையா் த.லெட்சுமி, நகராட்சித்தலைவா் கௌசல்யா ஆகியோரைச் சந்தித்த வியாபாரிகள், ‘தீபாவளி பண்டிகை வருவதால் கால அவகாசம் அளிக்குமாறு’ கோரினா். வியாபாரிகள் நலன் கருதி நவ. 10-ஆம் தேதி வரை அவா்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை நகராட்சி ஊழியா்கள் பிரதான சாலை, திருவேங்கடம் சாலை, ராஜபாளையம் சாலை, திருவள்ளுவா் சாலை போன்ற பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றினா். வாறுகாலை மூடி கட்டப்பட்ட கட்டடங்களை இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். பல இடங்களில் கடையின் மேற்கூரைகளை வியாபாரிகள் தாங்களாகவே அகற்றினா். 500-க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை நகராட்சியினா் அகற்றினா்.