FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

"சக மனிதர்கள் மீதான அக்கறையே சிறந்த உதவி'

சக மனிதர்கள் மீது காட்டும் அக்கறையே உலகில் எல்லாவற்றையும் விடப் பெரியது என, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ச. மகாதேவன் குறிப்பிட்டார்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

சக மனிதர்கள் மீது காட்டும் அக்கறையே உலகில் எல்லாவற்றையும் விடப் பெரியது என, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ச. மகாதேவன் குறிப்பிட்டார்.
பாளையங்கோட்டை திருமால்நகரில் வள்ளலார் தமிழ் மன்றத்தின் 50ஆவது சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்து பேசியது: தன்னுடைய ஆசிரியர் பாதிக்கப்பட்டதற்காக போராடி உயிர் நீத்த லூர்துநாதன் எனும் மாணவருக்கு சிலை வைத்திருப்பது தமிழகத்தில் பாளையங்கோட்டையில்தான். வரலாற்றை நம் குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும். 
நம்மை பாதிக்கும் சமூக நிகழ்வுகள் குறித்த அக்கறை நமக்கு வேண்டும். இலக்கியம் வாழ்வைச் செம்மைப்படுத்துகிறது. காலம் மாற மாற மதிப்பீடுகள் மாறிக் கொண்டே வருகின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ச. மகாதேவன் பேசியது: பெண் கல்விக்கும், பெண் விடுதலைக்கும் பாடுபட்ட மகாகவி பாரதி தமிழின் அடையாளம். 135 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் பயின்ற திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் நாற்றங்கால் எனும் பெயரில் பாரதி வரிகளோடும், பாரதி வாழ்வியல் ஓவியங்களுடனும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பாரதி எழுதிய கடவுள் வாழ்த்துப் பாடல் அனைத்து சமயங்களையும் மதிக்கும் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்கிறது. வாழ்வின் சவால்களை துணிச்சலோடு எதிர்கொள்ளும் மனஉறுதி வாழ்வை மேலும் இன்பமாக மாற்றுகிறது. சக மனிதர்கள் மீது காட்டும் அக்கறையே உலகில் எல்லாவற்றையும் விடப் பெரியது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அமைப்பின் நிறுவனர் பிச்சையா அறிமுக உரையாற்றினார். ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை கண்காணிப்பாளர் க. கௌரிலட்சுமி, குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தினார். பெண்பாற்புலவர்கள் எனும் தலைப்பில் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவி பா. சுருதிரமா, மீனா சங்கர் வித்யாலயா பள்ளியின் மாணவர்கள் வசந்த சஹானா, வசந்த், புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி மாணவி ஆதர்ஷினி ஆகியோர் இலக்கிய உரையாடல் நிகழ்த்தினர்.
மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் பி. உலகம்மாள் வரவேற்றார். பா. உமாபாபு நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments