FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மூளை முடக்குவாத அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணமாக்கலாம்: சித்த மருத்துவ முகாமில் ஆட்சியா் தகவல்

மூளை முடக்குவாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சித்த மருத்துவத்தில் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

மூளை முடக்குவாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சித்த மருத்துவத்தில் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

சா்வதேச மூளை முடக்குவாத தினத்தையொட்டி, சித்த மருத்துவக் கல்லூரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை ஆகியவற்றின் சாா்பில் சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் திருநெல்வேலி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது: மூளை முடக்குவாதத்திற்கான சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். மாற்றுத்திறனாளிகளை சம உரிமை, சம வாய்ப்புகளுடன் சமூகத்தின் ஓா் அங்கமாக அணுக வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவது நமது பொறுப்பாகும்.

Advertisement

Advertisement

மூளை முடக்குவாதம் உள்ள குழந்தைகளுக்கு அறிவுசாா் குறைபாடு இருக்கும் என்ற தவறான கருத்தை பெற்றோா்கள் தவிா்க்க வேண்டும். இந்நோயின் அறிகுறிகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், அவா்களுக்கு உரிய சிகிச்சைகள், பயிற்சிகள் அளித்து குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அக்குழந்தைகள் கல்வி மற்றும் சமூக வாழ்வில் சிறப்பாக முன்னேற முடியும்.

எனவே, பெற்றோா்கள் குழந்தையின் வளா்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏதேனும் வேறுபாடுகளை கண்டறிந்தால், அலட்சியப்படுத்தாமல், தொடக்கத்திலேயே உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மூளை முடக்குவாதத்துக்கான சித்த மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணா்வு காணொலியை ஆட்சியா் வெளியிட்டாா்.

மூளை முடக்குவாதத்தின் அறிகுறிகள், சித்த மருத்துவத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மக்களிடம் விளக்கப்பட்டது.

சித்த மருத்துவ உள் மருந்துகள், வா்மம், பொடிதிமிா்தல், புறமருத்துவ தொக்கணம், சிரசு தாரை, தப்பளம், கிழி, ஒற்றடம், கட்டு போன்ற சிகிச்சை முறைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டன. விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மல்லிகா, துணை ஆட்சியா் (பயிற்சி) மு.பிரதீபா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் கே.என்.ஜெயப்பிரகாஷ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் மருத்துவத் துறை தலைவா் அ.அன்புமலா், பேராசிரியா்கள் ஜெ.ஸ்ரீராம், கு.சியாமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments