FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கரும்புக்கான குறைந்தபட்ச விலையாக டன்னுக்கு ரூ.4,000 வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

கரும்புக்கான குறைந்தபட்ச விலையாக டன்னுக்கு ரூ.4,000 வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். குணசேகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
சேலம்- சென்னை இடையேயான 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இதர அமைப்புகள் சார்பில் சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களில் திங்கள்கிழமை ( ஆக.6) மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு  நிகழாண்டில் 10% பிழித்திறன் கொண்ட கரும்பு டன்னுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.2,750 அறிவித்துள்ளது. கடந்தாண்டில் 9.5 % பிழித்திறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,550 அறிவித்தது. 0.5% பிழித்திறனை அதிகரித்து விலையை அறிவிப்பதன் மூலம் கடந்தாண்டைக் காட்டிலும் டன்னுக்கு ரூ.62 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு செல்லவில்லை. பெயரளவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 18 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாகக் கலந்துள்ளது. எனவே, பாசன கால்வாய்களைத் தூர்வாரி, கடைமடை வரை தண்ணீர் 
செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பால் உற்பத்தி 2 கோடி லிட்டரை எட்டிய நிலையில், அறிவித்த தொகையைக் காட்டிலும் குறைந்தத் தொகையை வழங்கி ஆவின் நிறுவனமும், இதர தனியார் நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்கின்றன. வறட்சி,  அனைத்துத் தீவனங்களின் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், பசும்பால் லிட்டருக்கு ரூ.35, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.45 என கொள்முதல் விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலப் பொதுச் செயலர் மருத்துவர் வே.துரைமாணிக்கம்  சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசினார். மாநிலத் துணைத் தலைவர்கள் சி.எம்.துளசிமணி, பி. பெரும்படையார், துணைச் செயலர்கள் மாசிலாமணி, த. இந்திரஜித், எஸ். நல்லையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments