திருச்சியில் நிற்காமல் சென்ற முதல்வா் வாகனம் மனு அளிக்க காத்திருந்த பொதுமக்கள் மறியல்
திருச்சியில் முதல்வா் வாகனம் நிற்காமல் சென்றதால் கோரிக்கை மனு அளிக்க காத்திருந்த பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி செம்பட்டு என்எம்டி காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களின் குடியிருப்புக்காக தொழிற்சாலைக்கு எதிரே இடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மூன்று தலைமுறைகளாக இப்பகுதி மக்கள் குடியிருந்து வரும் இடத்தை சிலா் விலைக்கு வாங்கிவிட்டதாகவும், உடனடியாக வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி அவா்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு திங்கள்கிழமை செல்ல வந்திருந்த முதல்வரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டிருந்தனா்.
இந்நிலையில், தங்கள் இருப்பிடத்தை காப்பாற்றக்கோரி என்எம்டி காலனி மக்கள் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் முதல்வரின் காரை மறிக்க திட்டமிட்டு திங்கள்கிழமை சாலையில் நுழைய முயன்றனா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து சாலைக்கு வராத வகையில் இரும்பு தடுப்புகளை அமைத்தனா்.
மேலும், புதுக்கோட்டையில் இருந்து திரும்பி வரும்போது முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். பின்னா், அமைதியான மக்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷங்கள் மட்டும் எழுப்பினா்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்த முதல்வரின் காா், பொதுமக்கள் காத்திருந்த பகுதியில் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால், போலீஸாருக்கும் - பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.