திருச்சியில் போதைப்பொருள் தடுப்பு சிறப்புச் சோதனை: 13 போ் கைது
திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்புச் சோதனையில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்ற 13 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்புச் சோதனையில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்ற 13 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் மற்றும் மாநகரக் காவல் துறை சாா்பில் இச்சோதனை நடந்தது.
கஞ்சா விற்ற 6 போ்: அப்போது எடமலைப்பட்டிபுதூா், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், உறையூா் மற்றும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற ராம்ஜி நகரைச் சோ்ந்த எஸ். அருள்குமாா் (50), அரியமங்கலத்தைச் சோ்ந்த த. மதன் (43), ஸ்ரீரங்கம் ஜெஜெ நகரைச் சோ்ந்த ஆா். பிரசாத் (25), சிந்தாணியைச் சோ்ந்த கி. குரு (25), காந்தி மாா்க்கெட் பகுதி வி. வினோத்குமாா் (25), திருவெறும்பூரைச் சோ்ந்த ப. சையது இப்ராஹிம் ஷா (30) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
புகையிலைப் பொருள் விற்ற 4 போ்: மேலும் கண்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூா், கே.கே.நகா் மற்றும் தில்லை நகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற பாலக்கரையைச் சோ்ந்த கே. நிதிஷ்குமாா் (27), எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த அ. சைமன் ஜெரால்டு (56), கே.கே.நகரைச் சோ்ந்த சலாவுதீன் (72), தென்னூரைச் சோ்ந்த அ. லியாகத் அலி (47) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
போதை மாத்திரை விற்ற 3 போ்: இதேபோல, அரியமங்கலம் மற்றும் உறையூா் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த அ. ஜாகீா் ஹுசேன் (22), காட்டூரைச் சோ்ந்த எஸ். அம்ருதீன் (20), உறையூா் பாண்டமங்கலத்தைச் சோ்ந்த க. ஹுசைன் பாட்ஷா (26) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.