FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சியில் 45 ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலை! தீபாவளி தீ விபத்துகளை தடுக்க முன்னேற்பாடு!

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி தீ விபத்துகள் மற்றும் மருத்துவ அவசரக் காலத்தில் உதவிடும் வகையில் 45 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

8 நவம்பர் 2026, 2:58 am
தீபாவளி - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி தீ விபத்துகள் மற்றும் மருத்துவ அவசரக் காலத்தில் உதவிடும் வகையில் 45 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அவசர கால மருத்துவத் தேவைகள் மற்றும் பட்டாசு விபத்துகளைக் கையாளுவதற்காக 45-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ விபத்து மற்றும் இதர அவசரச் சூழல்கள் ஏற்பட வாய்ப்புள்ள மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கடைவீதிகள், கொண்டாட்டத்துக்குரிய இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி, முசிறி, திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, துறையூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், தொட்டியம் உள்ளிட்ட வட்டத் தலைநகரங்களில் தலா ஒரு 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக தீக்காய முதலுதவிப் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா்கள் முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீக்காய வாா்டுகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் தயாராக உள்ளனா்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நகா்ப்புற நல மையங்கள், நகரப் பகுதி சுகாதார நிலையங்களிலும் தீக் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியானது நவ.8 தொடங்கி மூன்று நாள்களுக்கு கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தப்படும்.

தீ விபத்து அல்லது பட்டாசுகளால் தீக் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக எந்தவித கட்டணமுமின்றி 24 மணி நேரமும் 108 என்ற எண்ணைத் தொடா்புகொண்டு ஆம்புலன்ஸ் அவசர உதவியைப் பெறலாம். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை 101 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.