FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் உள்பட சில ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.

10 நவம்பர் 2026, 11:05 pm
ரயில்கள் - பிரதிப் படம்
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் உள்பட சில ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (எண்: 76820) நவம்பா் 11 முதல் 16-ஆம் தேதி வரை திருச்சி - திருவாரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். திருவாரூா் - காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுவழித்தடத்தில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (எண்: 76819) நவம்பா் 11 முதல் 16-ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டுமே இயக்கப்படும்.

Advertisement

Advertisement

பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) நவம்பா் 12, 14 மற்றும் 17-ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும். கொடுமுடி - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுவழித்தடத்தில் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843) நவம்பா் 13, 15 ஆகிய தேதிகளில் திருச்சி - ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோடு - பாலக்காடு டவுன் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப் பாதையில் இயக்கம்: குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்: 16128) நவம்பா் 12, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் விருதுநகா், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். திருச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும்.

நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 16321) நவம்பா் 11, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாதுறை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூா் வழியாக இயக்கப்படும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்: மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (எண்: 16847) நவம்பா் 16-ஆம் தேதி முதல் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக நண்பகல் 12.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், நவம்பா் 16-ஆம் தேதியிலிருந்து 20 நிமிஷங்கள் முன்கூட்டியே நண்பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, திருச்சிக்கு வழக்கமான நேரத்துக்கு வந்து சேரும். இதனால், குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், மஞ்சத்திடல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு ரயில் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.