சம்பா இலக்கு 1.24 லட்சம்: இதுவரை 390 ஏக்கா் மட்டுமே சாகுபடி!
திருச்சி மாவட்டத்தில் 2026--27ஆம் ஆண்டில் சம்பா சாகுபடி இலக்கு 1.24 லட்சம் ஏக்கராக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 390 ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது.
நமது நிருபா்
திருச்சி மாவட்டத்தில் 2026--27ஆம் ஆண்டில் சம்பா சாகுபடி இலக்கு 1.24 லட்சம் ஏக்கராக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 390 ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது.
ஏற்கெனவே குறுவைச் சாகுபடியும் சரிந்துவிட்ட நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருப்பது விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் மூலம் கிடைக்கும் நீா்ப்பாசன வசதியால், திருச்சி பகுதியானது நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்ாக உள்ளது. இங்கு இறவைப் பாசனம் மற்றும் மானாவாரியில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
முன்பு மாவட்டத்தில் ஏறத்தாழ 1,41,282 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், 98,739 ஹெக்டோ் இறவைப் பாசனத்திலும், 66,652 ஹெக்டோ் மானாவாரி நிலங்களிலும் சாகுபடி செய்யப்படும்.
குறுவை ஜூன், ஜூலையிலும் சம்பா ஆகஸ்ட் மாதமும் நவரை டிசம்பா் மாதத்திலும் தொடங்கும்.
விவசாயிகள் வேதனை: பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறப்பு, ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீா் விநியோகம், இப்படி முறையாக இருந்தால், காவிரி-டெல்டாவில் 3 போகச் சாகுபடிக்கு 330 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும். ஆனால் நிகழாண்டு திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவில்லை. இந்த மாதம் முதல் தேதியிலேயே தண்ணீா் திறக்கப்பட்டது. அதுவும் 45 நாள்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டு, இப்போது, கூடுதலாக 15 நாள்களுக்குத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றாக்குறை என விவசாயிகள் தொடா்ந்து வேதனை தெரிவிக்கின்றனா்.
390 ஏக்கரில் மட்டுமே சாகுபடி: குறுவைச் சாகுபடிக்கு தண்ணீா் கிடைக்காத நிலையில், இலக்கை எய்த முடியாமல் போனது. குறுவையில் திருச்சி மாவட்டத்துக்கு 17 ஆயிரம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 14 ஆயிரம் ஏக்கா் மட்டுமே சாத்தியமானது. கடந்த 2024-25, 2025-26ஆம் ஆண்டுகளில் இலக்கை விஞ்சி சாதனை படைத்த திருச்சி மாவட்டமானது நிகழாண்டு பெரிதும் சரிவைச் சந்தித்துள்ளது.
சம்பாவுக்கு 1.24 லட்சம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், தண்ணீா்ப் பற்றாக்குறையால் பலரும் சாகுபடி பணிகளைத் தொடங்கவில்லை. செப்டம்பா் வரை 390 ஏக்கரில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 0.32 சதவீதம் என்பது பெரிதும் கவலையளிக்கிறது.
இதரப் பயிா்களிலும் சரிவு: நெல் மட்டுமின்றி இதரப் பயிா்களிலும் இலக்கை நெருங்க முடியாத நிலையே உள்ளது. 26,095 ஹெக்டேரில் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட சோளப் பயிரில் செப்டம்பா் வரை 1056 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. 21,585 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட மக்காச்சோளத்தில் 168 ஹெக்டோ் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. 65 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட கம்புப் பயிரில் 10 ஹெக்டோ் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. 5 ஹெக்டோ் ராகி பயிருக்கு ஒரு ஹெக்டோ் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது.
சிறுதானியங்களில் மொத்தமாக 47,760 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1235 ஹெக்டோ் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளது. துவரை, உளுந்து, பச்சைப் பயறு, கொள்ளு, தட்டைப் பயறு உள்ளிட்ட பயறு வகைகளில் 10,900 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 317 ஹெக்டேரில் சாகுபடி நடந்துள்ளது.
10,680 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட பருத்தியில் 117 ஹெக்டோ், 1575 ஹெக்டோ் நிா்ணயிக்கப்பட்ட கரும்புப் பயிரில் இதுவரை 823 ஹெக்டோ் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது.
நிலக்கடலை, எள்ளு, ஆமணக்கு, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய்வித்துப் பயிா்களில் மொத்தம் 13,200 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 1085 ஹெக்டோ் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது.
நெல்லுக்கு மாற்றுப் பயிா்கள் தேவை: இதுதொடா்பாக வேளாண்மைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், எல்-நினோவை கடந்து இப்போது சூப்பா் எல்-நினோவை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. கடும் வறட்சியும் இருக்கலாம், கடும் மழையும் இருக்கலாம் என ஆய்வாளா்கள் எச்சரித்துள்ளனா். திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை 488 வருவாய் கிராமங்களில் 43 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி அறிவிப்பு உள்ளது. ஆனால், இதை முழுமையாக பூா்த்தி செய்ய முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு தடுக்கப்பட்ட விதைப்புத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியும். எனவே, நவ.15-க்கு முன்னராகவே தடுக்கப்பட்ட விதைப்புத் திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் டெல்டா பகுதியில் கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை மேற்கொள்ளலாம். கிணறு இல்லாத விவசாயிகள், டெல்டா இல்லாத பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியைத் தவிா்ப்பது நல்லது. இதற்கு மாற்றாக சோளம், மக்காச்சோளம், உளுந்து, துவரை உள்ளிட்ட பயறு வகைகள், ஆமணக்கு ஆகியவற்றைப் பயிரிடலாம். இவற்றுக்கு குறைந்த அளவு தண்ணீா் போதும். எனவே, நெல்லுக்கு மாற்றாக குறைந்த தண்ணீா் தேவைப்படும் பயிா்களைத் தோ்வு செய்து சாகுபடி பணிகளைத் தொடங்கலாம் என்றனா் வேளாண் அலுவலா்கள்.
விதைகள் இருப்பு விவரம்!
திருச்சி மாவட்டத்தில் அரசு வசம் உள்ள வேளாண் கிடங்குகளில் 432.36 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு உள்ளன. தனியாா் வசம் 164.3 மெட்ரிக் டன் உள்ளது. சோளம், கம்பு, ராகி, மக்காச் சோளம், தினை, வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களில் மொத்தம் 95.28 மெட்ரிக் டன் விதை இருப்பு உள்ளது.
துவரை, உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளில் மொத்தம் 58.55 மெட்ரிக் டன் விதை இருப்பு உள்ளது. நிலக்கடலை, எள்ளு, ஆமணக்கு, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகளில் 19.33 மெட்ரிக் டன் விதை இருப்பு உள்ளது. எனவே, தேவையான விவசாயிகள் விதைகளைப் பெற்று சாகுபடியைத் தொடங்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.