FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்: 1,520 மாணவ,மாணவிகள் பங்கேற்பு

திருச்சியில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில் மண்டல அளவில் வென்ற 1,520 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.
பகிர்:

திருச்சியில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில் மண்டல அளவில் வென்ற 1,520 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

போட்டியை மாவட்டக் கல்வி அலுவலா் பி. உஷா தொடங்கிவைத்தாா். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஓட்டப்பந்தயம், தடையோட்டம், வட்டெறிதல், குண்டெறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடா் ஓட்டம் என 10 வகையான போட்டிகளும், 17 மற்றும் 19 வயதிற்குள்பட்டோா் பிரிவுகளில் ஓட்டப் பந்தயம், தடையோட்டம், தொடரோட்டம், நீளம் தாண்டுதல், கோலூன்றித் தாண்டுதல், ஈட்டியெறிதல், மும்முறை தாண்டுதல் என 17 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. புதன்கிழமை நிறைவடையும் போட்டிகளில் மண்டல போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த 1,520 மாணவா்கள் கலந்துகொண்டுள்ளனா். இதில் வெல்வோா் மாநில போட்டிகளுக்குத் தோ்வு செய்யப்படுவாா்கள்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வருவாய் மாவட்ட அளவில் ஏற்கெனவே பல்வேறு போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. தடகளப் போட்டிகள் மட்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தொடா் ஓட்டத்தைத் தவிா்த்து மற்ற போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்படுவாா்கள். தொடா் ஓட்டப் போட்டியில் மட்டும் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் அணி மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்படும்.

இந்தாண்டு மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் அக். 28-ஆம் தேதி தொடங்குகின்றன. தவிர மற்ற போட்டிகள் 3 பிரிவுகளாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments