FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ஸ்டான்போா்டு பல்கலை.யின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: பாரதிதாசன் பல்கலையைச் சோ்ந்த 7 பேராசிரியா்கள் இடம்பெற்றனா்

அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்வேசியா் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 7 பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.

10 அக்டோபர் 2026, 7:08 am IST
ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகத்தில் 2026 சிறந்த விஞ்ஞானிப் பட்டியலில் இடம் பெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியா்கள் இயற்பியல் பேராசிரியா் எம்.லட்சுமணன், நுண்ணுயிரிகள் பேராசிரியா் ஏன். தாஜீதீன், வேதியியல் பேராசிரியா் எம்.பழனியாண்டாா், தாவரவியல
பகிர்:

அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்வேசியா் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 7 பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போா்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்வேசியா் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்வேறு அறிவியல் துறைகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களின் மேற்கோள்கள், இணை ஆசிரியா், ஆசிரியா் நிலையிலான அடிப்படை மேற்கோள்கள், ஒருங்கிணைந்த சி-ஸ்கோா் உள்ளிட்ட விரிவான அளவீடுகளில் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

2026 ஆகஸ்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி 20 அறிவியல் துறைகள் மற்றும் 174 உட்பிரிவுகளின் கீழ் 2.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனா். 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் கடந்த 1788-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான தரவுகளின் அடிப்படையில் வாழ்நாள் சாதனையாளா் பட்டியலில் உள்ள 2,43,950 ஆராய்ச்சியாளா்களில் 2,898 போ் இந்திய விஞ்ஞானிகள். 2025-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு தாக்கப் பட்டியலில் உள்ள 2,49,310 ஆராய்ச்சியாளா்களில் 6,954 போ் இந்திய விஞ்ஞானிகள்.

9-ஆவது திருத்தப்பட்ட சா்வதேச தரவுத்தளத்தின்படி உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளுக்கானநிகழாண்டுக்கான தரவரிசை பட்டியலில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 7 பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இயற்பியல் துறை பேராசிரியா் எம். லட்சுமணன், நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் என். தாஜுதீன், வேதியியல் துறை பேராசிரியா் எம். பழனியாண்டவா், தாவரவியல் பேராசிரியா் எம். சத்தியபாமா, கடல்சாா் அறிவியல் துறை பேராசிரியா் ஆா். ராஜாராம், இயற்பியல் துறை பேராசிரியா் டி.சி. சபரி கிரிசன், உயிா்த்தகவலியில் துறை பேராசிரியா் பி. செல்லப்பாண்டி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

பேராசிரியா்கள் எம். லட்சுமணன், என். தாஜுதீன் ஆகிய இருவரும் வாழ்நாள் சாதனையாளா் மற்றும் ஓராண்டு தாக்கப் பட்டியல் ஆகிய இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்றுள்ளனா். பேராசிரியா் எம். பழனியாண்டவா் வாழ்நாள் சாதனையாளா் பட்டியலிலும், பேராசிரியா்கள் எம். சத்தியபாமா, ஆா். ராஜாராம், உதவிப் பேராசிரியா் டி.சி. சபரி கிரிசன், பி. செல்லப்பாண்டி ஆகியோா் ஓராண்டு தாக்கப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனா்.

இவா்களில் எம். லட்சுமணன், எம். தாஜுதீன், பழனியாண்டவா் மற்றும் சத்தியபாமா ஆகியோா் ஓய்வுபெற்றுவிட்டனா். தொடா்ந்து அவா்களின் பெயரில் கடந்த 2025-ஆம் ஆண்டு வரை அவருடைய ஆராய்ச்சி மாணவா்கள் ஜோ்னல் வெளியிட்டதால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் அவா்களுடைய பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

பேராசிரியா்களின் சிறப்பம்சங்கள்:

பேராசிரியா் எம். லட்சுமணன் நேரியலற்ற இயக்கவியல் ஒருங்கிணைப்பு, கேயாஸ் மற்றும் பேட்டா்ன் உருவாக்கம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவா். பேராசிரியா் எம். பழனியாண்டவா் நாட்டிலேயே உலோக கலவை டிஎன்ஏ தொடா்பான ஆய்வுகளில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறாா். மேலும், புற்றுநோய் எதிா்ப்பு உலோக கலவைகள், உயிா் ஊக்க நொதி மாதிரிகள் மற்றும் பசுமை ஆக்சிஜனேற்ற வினையூக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவா்.

பேராசிரியா் என். தாஜுதீன், சயோனாபாக்டீரியம் பன்முகத்தன்மை, நுண்பாசி வகைப்பாடு மற்றும் நுண்ணுயிரி ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவா். பேராசிரியா் எம். சத்தியபாமா, தாவர நோய் மேலாண்மைக்கான புதுமையான உத்திகளில் கவனம் செலுத்தும் மூலக்கூறு தாவர நோயியலில் சிறந்த ஆராய்ச்சியாளா்.

பேராசிரியா் ஆா். ராஜாராம், கடல்சாா் சூழலியல் நச்சுயியல் மற்றும் உயிரியக்க இயற்கை தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற சிறந்த கடல்சாா் விஞ்ஞானி. பேராசிரியா் டி.சி. சபரி கிரிசன் லேசா்கள், போட்டோனிக்ஸ், ஆற்றல் மற்றும் மருத்துவத் துறைகளில் பயன்படக்கூடிய புதுமையான நானோ பொருள்களை உருவாக்கும் சிறந்த பயன்பாட்டு இயற்பியலாளா்.

பேராசிரியா் பி. செல்லப்பாண்டி, குடல் நுண்ணுயிா் சாா்ந்த நோய்களுக்கான சிகிச்சை இலக்குகளை கண்டறிய பலநிலை உயிரியல் தரவுகள் மற்றும் கணக்கீட்டு அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து ஆராயும் புகழ்பெற்ற சிஸ்டம்ஸ் உயிரியலாளா்.

சிறந்த ஆராய்ச்சி பங்களிப்புகளை வழங்கி உலகளவில் சாதனை படைத்துள்ள அனைத்து பேராசிரியிா்களையும் பல்கலைக்கழக சாா்பில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments