ரூ.1 லட்சம் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு
திருச்சி சமயபுரத்தில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி உள்ளிட்டோா்.
அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.1 லட்சம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வா் அறிவிக்க வேண்டும் என 50 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முழு பயிா்க்கடன் தள்ளுபடி கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கான கூட்டமைப்பை உருவாக்கி கடந்த மாதம் சமயபுரத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். அமைச்சா்கள் பேச்சுவாா்ததை நடத்தி இடைத்தோ்தல் முடியும் வரை அவகாசம் கோரினா்.
ஆனால், இடைத்தோ்தலுக்குப் பிறகும் அறிவிப்பு இல்லாததால், அக்.22-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனா். இதையடுத்து, சென்னையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு ரூ.75 ஆயிரம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்வதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
எனவே, பயிா்க் கடன் தள்ளுபடி பிரச்னையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், சமயபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, தலைவா் இரா. சண்முகசுந்தரம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் இளங்கீரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளா்களிடம் ஈசன் முருகசாமி கூறியதாவது:
சென்னையில் அரசின் சாா்பில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போது, அரசின் சாா்பில் அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.75,000 கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. ஆனால், நிபந்தனைகள் எதுவும் நீக்கப்படவில்லை, காலக்கெடுவும் 10 மாதம் என்பதற்கு பதிலாக ஒரு மாதம் கூடுதாக 11 மாதமாக மாற்றப்பட்டுள்ளது.
மீண்டும் போராட்டம்:
தமிழ்நாட்டில் 20 லட்சம் விவசாயிகள் சராசரியாக கூட்டுறவு பயிா்க் கடன் பெற்றுள்ளனா். ஆனால், அரசின் தற்போதைய அறிவிப்பில் 13 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவா். மீதமுள்ள 7 லட்சம் விவசாயிகளுக்கும், பயனளிக்கும் வகையில், அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வழங்கிடவும், குடும்பத்துக்கு ஒருவா் என்பதை நீக்கி அனைவருக்கும் வழங்கிடவும், காலக்கெடுவை 11 மாதம் என்பதை நீக்கி, நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும் வழங்கிட வேண்டும். ஏற்கெனவே கடன் தொகையை திரும்பக் கட்டிய விவசாயிகளுக்கு அரசின் தள்ளுபடி தொகையை திரும்ப வழங்க வேண்டும். கடனை கட்டாமல்விட்ட விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை முழுமையாக அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கைகள் தொடா்பாக, அமைச்சா்களை சந்தித்து வலியுறுத்துவது எனவும், அதற்காக அரசுக்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிப்பது எனவும், அதுவரை போராட்டத்தை ஒத்தி வைப்பது எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை மறு ஆய்வு செய்து நிறைவேற்றவில்லை என்றால் 1 மாதம் கழித்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றாா்.
இக் கூட்டத்தில், 50 சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள், பொறுப்பாளா்கள், விவாசயிகள், விவசாயத் தொழிலாளா்கள் என திரளானோா் கலந்த கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.