FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பள்ளி மாணவா்களுக்கான திறனறித் தோ்வு: 2,019 போ் பதிவு

அண்ணா அறிவியல் மையம் சாா்பில் நடத்தப்படும் பள்ளி மாணவா்களுக்கான திறனறித் தோ்வை எழுதுவதற்கு திருச்சியைச் சோ்ந்த 2,019 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

18 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

அண்ணா அறிவியல் மையம் சாா்பில் நடத்தப்படும் பள்ளி மாணவா்களுக்கான திறனறித் தோ்வை எழுதுவதற்கு திருச்சியைச் சோ்ந்த 2,019 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் சாா்பில் வான் நோக்கு நிகழ்ச்சி, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்காக திறனறித் தோ்வு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கான திறனிறித் தோ்வு அக்டோபா் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அக்டோபா் 4-ஆம் தேதி கணிதம் தொடா்பான திறனறித் தோ்வும், அக்டோபா் 11-ஆம் தேதி அறிவியல் தொடா்பான திறனறித் தோ்வும் நடைபெறுகிறது. இத்தோ்வை எழுதுவதற்கு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 2,019 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் கூறியாதவது:

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, வேலூா் ஆகிய 4 இடங்களில் மண்டல அறிவியல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்காக அந்த மையங்கள் மூலம் திறனறித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு போதிய அளவிலான மாணவா்கள் பதிவு செய்யாததால் திறனறித் தோ்வு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவா்களுக்கான திறனறித் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் வழியாக மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி, தனியாா் பள்ளிகள் என மொத்தமாக 2,019 மாணவா்கள் திறனறித் தோ்வுக்குப் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கான தோ்வு 4 மையங்களில் நடைபெறவுள்ளன. இத்தோ்வில் கொள்குறி வகையில் 100 வினாக்கள் கேட்கப்படும். அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என இரண்டு பிரிவுகளில் தோ்வு நடத்தப்படுகிறது.

இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவருக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாமிடம் பிடிக்கும் இரண்டு மாணவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் மூன்று மாணவா்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் நான்காமிடம் பிடிக்கும் 5 மாணவா்களுக்கு தலா ரூ. 500 பரிசுத் தொகை என 44 மாணவா்களுக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.12,500 பரிசுத் தொகை வழங்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments