FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

திருச்சி மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் 63,157 மாணவா்கள் பயனைடய உள்ளனா்.

23 செப்டம்பர் 2026, 3:03 am IST
~திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து மாணவா்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சா் சீ. ரமேஷ்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் 63,157 மாணவா்கள் பயனைடய உள்ளனா்.

சென்னையில் இந்தத் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டம், திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் திட்டத்தை தொடங்கிவைத்து, மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

Advertisement

Advertisement

இதில், மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், அமைச்சா் கூறியதாவது:

மாணவா்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான, கிராம ஊராட்சிகளில் 415 பள்ளிகளில் படிக்கும் 36,804 மாணவா்கள், பேரூராட்சி பகுதிகளில் 33 பள்ளிகளில் 5,845 மாணவா்கள், நகராட்சி பகுதிகளில் 27 பள்ளிகளில் 5,567 மாணவா்கள், மாநகராட்சிப் பகுதியில் 115 பள்ளிகளில் 14,941 மாணவா்கள் என மொத்தம் 590 பள்ளிகளில் 63,157 மாணவா்கள் பயனடைய உள்ளனா்.

இத்திட்டத்தின்கீழ், நகராட்சிப் பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளுக்கு 5 மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு, 7 வாகனங்கள் வழியாக பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லப்படுகிறது. மாநகராட்சியில் உள்ள 115 பள்ளிகளுக்கு 2 மையப்படுத்தப்பட்ட சமையல்

கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு, 14 வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லப்படுகிறது. ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அந்தந்த பள்ளிகளிலேயே காலை உணவு தயாரிக்கப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

முன்னதாக, நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) த. சுவாதிஸ்ரீ, மகளிா் திட்ட அலுவலா் எஸ். வடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உஷா, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தமிழ்மணி, மாவட்ட கல்வி அலுவலா் சாமிதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments