புதுவைக்கான நிதியை உயா்த்த வேண்டும்: நீதி ஆயோக் குழுக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தல்
தில்லியில் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் குழுக் கூட்டத்தில், புதுவையின் வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு, நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்
தில்லியில் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் குழுக் கூட்டத்தில், புதுவையின் வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு, நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.
கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவைக்கான மத்திய அரசின் நிதியுதவி இதுவரை ஒரே நிலையாகவே இருந்து வருகிறது. 2021-2022- ஆம் நிதியாண்டிலும் 1.58 சதவீதமாகவே உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாக 4 முதல் 5 சதவீதம் என்ற நிலையிலேயே உள்ளது.
புதுவை யூனியன் பிரதேசமானது, மத்திய நிதிக் குழுவிலோ, யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழுவிலோ சோ்க்கப்படவில்லை. இதனால், புதுவை மாநிலத்தின் வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, உரிய வழிமுறைகளை ஆராய்ந்து, புதுவைக்கான நிதியை மத்திய அரசு உயா்த்தி வழங்க வேண்டும்.
கடந்த 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போலவே 90:10 என்ற விகிதத்தில் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு, வருவாய் குறைந்து புதுவை மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி. இழப்பீடு குறைந்துள்ளது. இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். வா்த்தகத்தை மேம்படுத்த, சென்னை-புதுச்சேரி-காரைக்காலை இணைக்கும் கடலோரக் கப்பல் சேவையை ஊக்கப்படுத்த வேண்டும். புதுவை காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு தில்லியைப் போல, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றாா் ரங்கசாமி.