புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர். காங்கிரஸ் 8,501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
சில மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் மக்கள் செல்வாக்கு சோதனையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து...
புதுச்சேரி: சில மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் மக்கள் செல்வாக்கு சோதனையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ.அசோக் ஆனந்த் 8,501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். திமுக வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பலத்த பாதுகாப்புடன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக்.9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அனைத்துச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 8,501 வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ.அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி இரண்டிலும் வெற்றி பெற்றாா்.
இதில், தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா அவா் செய்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சாா்பில் 6 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் ஆக மொத்தம் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டனர். இவா்களில், என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ.அசோக் ஆனந்த், திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வம், காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீம் ஆகியோா் இடையே 4 முனைப் போட்டி நிலவியது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடைத்தோ்தலுகான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதியான மொத்த வாக்காளர்கள் 26,921 பேர். இவர்களில் ஆண்கள் 12575, பெண்கள் 14341. மூன்றாம் பாலினத்தவர் 5 பேர். இதில் 21,756 பேர் வாக்களித்தனர். அதாவது 80.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும் 6.39 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவானது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மேஜைகளில் வைக்கப்பட்டது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில், என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 65 வாக்குகள் பெற்றார்.
தொடர்ந்து 8 மேஜைகள் அமைக்கப்பட்டு 4 சுற்றுகளாக இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது.
சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கை விபரம் வருமாறு:
முதல் சுற்று:
அசோக் ஆனந்த் (என்ஆர்.காங்) - 3,209
விநாயகம் (காங்கிரஸ்) - 1,222
சேதுசெல்வம்(திமுக) - 792
சலீம் (இந்திய கம்யூ.) - 71
கார்திக் குமாரி (நாதக) - 53
முதல் சுற்றில் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை விட 1,987 வாக்குககள் முன்னிலை பெற்றார்.
இரண்டாவது சுற்று:
அசோக் ஆனந்த் (என்ஆர்.காங்) - 6950
விநாயகம் (காங்கிரஸ்) - 2392
சேதுசெல்வம்(திமுக) - 1534
4,558 வாக்குகள் வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார்.
மூன்றாவது சுற்று:
அசோக் ஆனந்தன் (என்.ஆர் காங்கிரஸ்) - 10,467
விநாயகம்(காங்கிரஸ்) - 3,599
சேது செல்வம் திமுக) - 2154
6,868 வாக்குகள் வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார்.
நான்காவது சுற்று:
என்.ஆர் காங்கிரஸ்- 13, 358
காங்கிரஸ்- 4,876
திமுக- 2,664
இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 310
நாம் தமிழர் கட்சி- 172
நோட்டா-225
வாக்குகள் எண்ணிக்கை முடிவில் 13,358 வாக்குகளுடன் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். மேலும், காங்கிரஸ் 4,876 வாக்குகளும், திமுக 2,664 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சதவீதம்
அசோக் ஆனந்த் - 13358(61.12%)
இ. விநாயகம் - 4876(22.31%).
கு. சேது செல்வம் - 2664(12.19%)
அ.மு. சலீம் - 310(1.42%)
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தன; 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ. விநாயகம் 4,876 வாக்குகளும், திமுகவின் கே. சேது (எ) சேதுசெல்வம் 2,664 வாக்குகளையும் பெற்றனர். முக்கிய திராவிடக் கட்சியான திமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட முதல்வர் என்.ரங்கசாமி பெற்ற வாக்குகள் 10,024. இடைத்தேர்தலில் அசோக் ஆனந்த் பெற்ற வாக்குகள் 13,358. முதல்வர் ரங்கசாமி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் 3,334 கூடுதலாகப் பெற்றுள்ளார். இது முதல்வர் ரங்கசாமி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் 33.2 சதவீதம் அதிகம்.
இதையடுத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Ruling AINRC on Friday emerged the winner in its first test of popularity after it assumed office months ago as its nominee Ashok Anand won the Thattanchavady bypoll by over 8,000 votes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.