முகப்பு
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: மிதுனம்

மிதுன ராசிக்கு இந்தாண்டு எப்படி இருக்கும்?

மிதுன ராசி
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2025 at 1:40 PM

கிரகநிலை

ராசியில் குரு(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).

கிரக மாற்றங்கள்

Advertisement

06.03.2026 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று ராசியில் இருந்து குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்

இந்த வருடம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். ராசியாதிபதி புதன் மனதிலிருந்த கவலையைப் போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்குப் பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாகக் கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதால் தொழிலில் எந்த ஒரு சவாலையும் உங்களால் சமாளிக்க முடியும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். உங்களுடைய தனித்திறமை வெளிப்படும். எந்த ஒரு குழப்பமான கடினமான காரியங்களிலும் புத்தி சாதுரியத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

Updated On : 29 டிசம்பர், 2025 at 1:42 PM

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களைக் கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராகும்.

பெண்களுக்கு: எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

கலைத்துறையினருக்கு: போட்டிகள் நீங்கும். உங்களுக்குப் பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரியத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அரசியல் துறையினருக்கு: வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விடச் செலவு கூடும். புதிய பதவிகள் கிடைப்பதற்குப் பொறுமை மிக மிக அவசியம் சக நண்பர்களுடன் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.

மாணவர்களுக்கு: கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது. எதிர்பாராதவிதமாக சில தடைகள் ஏற்படலாம் எந்த ஒரு விஷயத்தையும் மிகக் கவனமாகக் கையாள்வது அவசியம்.

Updated On : 29 டிசம்பர், 2025 at 1:42 PM

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்

இந்த வருடம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணத்தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதைச் செய்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். மாணவர்கள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

திருவாதிரை

இந்த வருடம் புதிதாகச் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்

இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரக் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கித் தெளிவு ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் - சுக்ரன் - சனி

எண்கள்: 3, 5, 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.