முகப்பு
செய்திகள்

சங்கத் தமிழன் படம் எப்போது வெளியாகும்?: தொடர்ந்து சிக்கல்களுக்கு ஆளாகும் விஜய் சேதுபதி படங்கள்!

இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 

Updated On : 15 நவம்பர் 2019, 11:42 am IST
பகிர்:

இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 

சங்கத் தமிழன் படத்தை திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிட திருநெல்வேலி நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவா், நெல்லை மண்டல திரைப்பட விநியோகஸ்தா்கள் சங்க உறுப்பினா். கடந்த 2013 இல் லிப்ரா புரொடக்ஷன் ரவிச்சந்திரனுக்கு அன்பழகன் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால், அந்த பணத்தை தராமல் ரவிச்சந்திரன் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், அன்பழகன் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானாா். அவரது மகன் விக்னேஷ், தனது தந்தை கொடுத்த ரூ. 15 லட்சத்தை ரவிச்சந்திரனிடம் இருந்து பெற்றுத் தருமாறு நெல்லை மண்டல திரைப்பட விநியோகஸ்தா்கள் சங்கத் தலைவா் குணசேகரனை நாடியுள்ளாா்.

இதையடுத்து, அவா் ரவிச்சந்திரனிடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, ‘மிக மிக அவசரம்’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 15 லட்சத்தை கொடுத்துவிடுவதாக ரவிச்சந்திரன் கூறினாராம்.

இந்நிலையில், ‘மிக மிக அவசரம்’ படம் வெளியான பின்னரும் ரவிச்சந்திரன் ரூ. 15 லட்சத்தை விக்னேஷுக்கு தரவில்லையாம். இதையடுத்து, வழக்குரைஞா்கள் மணிகண்டன், பொன்னுசாமி, ரமேஷ் ஆகியோா் மூலம் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகவுள்ள ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலி முதலாவது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் விக்னேஷ் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில், நடிகா் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்தை திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வெளியிட வரும் 21ஆம் தேதி வரை தடைவிதித்தாா்.

எனினும் தமிழகம் முழுக்க சங்கத் தமிழன் படம் இன்று காலைக் காட்சிக்கு வெளியாகவில்லை. இதற்கு முன்பு வெளியான படங்கள் தொடர்பான கடன் பிரச்னை தொடர்ந்து நீடிப்பதால் திட்டமிட்டபடி இன்று சங்கத் தமிழன் படம் வெளியாகவில்லை. இதனால் படத்துக்கு முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். எனினும் சிக்கல்கள் களையப்பட்டு, மதியக் காட்சி அல்லது மாலைக் காட்சி முதல் சங்கத் தமிழன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது இன்று வெளியாகாமல் நாளை வெளியாகுமா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எல்லா பணப்பிரச்னைகளும் முடிந்தபிறகே சங்கத் தமிழன் படம் வெளியாகவுள்ளதால் பட வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் சேதுபதி நடித்த படத்தின் வெளியீடு தாமதமாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த 96, சிந்துபாத் படங்களும் வெளியீட்டின் போது இதுபோன்ற தாமதங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் மற்றுமொரு விஜய் சேதுபதி படத்துக்கு அதேபோன்றதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பாரா விஜய் சேதுபதி? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.