முகப்பு
செய்திகள்

மும்பை மழையில் நடனம் ஆடியதற்குக் காரணம் இதுதான்: நடிகை தீபிகா சிங் விளக்கம்

பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் வேரோடு சாய்ந்த மரங்களின் அருகில் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை.

Updated On : 22 மே, 2021 at 5:44 PM
பகிர்:

புயல் பாதிப்புக்கு மத்தியில் நடனம் ஆடி அதன் புகைப்படங்கள், விடியோவைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டது குறித்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் நடிகை தீபிகா சிங்.

டவ்-தே’ புயல் காரணமாக மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் கனமழை பெய்தது. மும்பை பகுதியில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மணிக்கு 102 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அங்கு பலத்த மழையும் பெய்தது. புயல் காரணமாக மரங்கள் பல வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகளை தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள் மேற்கொண்டன.

2011-ல் ஹிந்தி தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமான தீபிகா சிங், பல தொடர்களில் நடித்து புகழை அடைந்தார். 2014-ல் ரோஹித் ராஜ் கோயலைத் திருமணம் செய்தார். 2017-ல் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

மும்பையில் வீசிய புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனம் ஆடி அதைப் புகைப்படங்கள், விடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார் தீபிகா சிங். 

கரோனா, டவ்-தே புயல் ஆகியவற்றால் மும்பை நகரம் பலத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் இதுபோல சாலையில் நடனம் ஆடியதும் அதன் படங்களையும் விடியோவையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதும் மிகப்பெரும் தவறு என ரசிகர்கள் பலரும் தீபிகா சிங்கின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் புயல் பாதிப்பின்போது சாலையில் நடனம் ஆடியது பற்றி ஆங்கில நாளிதழுக்கு தீபிகா சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

புயலால் பாதிக்கப்பட்டவர்களை எண்ணி நான் வேதனையடைந்துள்ளேன். பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் வேரோடு சாய்ந்த மரங்களின் அருகில் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோல மற்றவர் செய்வதை நான் ஊக்கப்படுத்தவும் மாட்டேன்.

எங்கள் வீட்டின் அருகே சில வருடங்களுக்கு முன்பு ஒரு மரத்தை வளர்த்தோம். அது இந்தப் புயலின்போது வேரோடு சாய்ந்து, எங்கள் காரின் மீது விழுந்துவிட்டது. உடனே நானும் என் கணவரும் காரை அப்புறப்படுத்த மழை பெய்தபோது வெளியே வந்தோம். அப்போது என்னைச் சில புகைப்படங்கள் எடுக்க என் கணவர் எண்ணினார். சட்டென்று நாங்கள் செய்த செயல் அது என்று பேட்டியளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.