உளவுத்துறைக்கு ரகசிய தகவல்: சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு
உளவுதுறைக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து சூர்யாவுக்கு துப்பாக்கிய ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள 'ஜெய் பீம்' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கறிஞர் சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு குறிப்பிட்ட சாதியின் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அந்த சின்னம் படத்தில் இருந்து அகற்றப்பட்டது. இருப்பினும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. சூர்யாவை தாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் தருவதாக பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து வி ஸ்டேன்ட் வித் சூர்யா என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. சூர்யாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சூர்யாவின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு காவலர் பாதுகாப்பு அளித்து வருகிறார். பாதுகாப்பு கேட்டு சூர்யா தரப்பில் இருந்து காவல்துறையினரிடம் கோரிக்கை மனு எதுவும் அளிக்கப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.