FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மர்மங்களைத் தேடும் ஜான் டோ: திரை விமர்சனம்

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் சைக்கோ கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ஜான் டோ திரை விமரிசனம் குறித்து...

13 நவம்பர் 2026, 11:35 am
ஜான் டோ திரை விமர்சனம்
பகிர்:

நடிகர் அர்ஜுன் தாஸ் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெளியாகியிருக்கிறது ஜான் டோ திரைப்படம்.

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் சைக்கோ கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் எப்படி இருக்கிறது?

Advertisement

Advertisement

வல்லமை தாராயோ, கேடி, கொல கொலயா முந்திரிக்கா, லாபட்டா, லவ் ஆல்வேஸ் என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அடுத்தடுத்த படங்களைக் கொடுத்து கவனிக்க வைத்தவர் மதுமிதா. அந்த வரிசையில் க்ரைம் திரில்லர் வகையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், நடிகை சஞ்சனா நடராஜன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள கிராமத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் சந்துரு (அர்ஜுன் தாஸ்). ஒரு நாள் பணியில் இருக்கும் போது ஏறி ஒன்றிற்குள் கட்டுப்பாட்டை இழந்த கார் மூழ்கி விபத்திற்குள்ளாகிறது. அதில் இருந்த ஒரு சிறுவன் இறந்தும் போகிறான். அந்த சிறுவனை காப்பாற்ற முயன்ற அர்ஜுன் தாசின் முயற்சி தோல்வியில் முடிகிறது. இதனால் குற்ற உணர்வுக்குள்ளாகும் அர்ஜுன் தாஸ் அந்த வழக்கை எடுத்து நடத்துகிறார். ஒரு கட்டத்தில் வழக்கு முடிவடைந்தாலும் அதில் இருக்கும் மர்மம் அர்ஜுன் தாஸ்-க்கு ஒரு சந்தேகத்தை கிளப்புகிறது. அது சஞ்சனா கையாளும் குழந்தை தொலைந்து போன மற்றொரு வழக்கிற்கு அவரைக் கொண்டு செல்கிறது. இறந்து போன குழந்தை யார்? இறந்த குழந்தைக்கும் தொலைந்து போன குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த மர்மமான வழக்கின் பின்னணியை அர்ஜுன் கண்டுபிடித்தாரா என்பதை இரண்டரை மணி நேர விறுவிறுப்பான கதையாக பேசியிருக்கிறது ஜான் டோ திரைப்படம்.

நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு படத்திற்கு பெரும்பலமாக இருக்கிறது. தனது தந்தையால் மட்டம் தட்டப்படும் குழந்தையாக வளர்ந்த அவரது சுபாவம் எல்லை மீறாமல் காட்சிக்கு காட்சி சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. குழந்தையைத் தேடி ஓடும் அவரது பரிதவிப்பும், சஞ்சனா உடன் காதல் பேசும் கண்களும் ரசிக்க செய்கின்றன. முரட்டுத்தனமாக தோன்றினாலும் கூடுமானவரை அதை தேவையான காட்சிகளுக்கு மட்டும் கொடுத்து கவனம் ஈர்க்கிறார். அவருக்கு போட்டியாக நடித்திருக்கிறார் சஞ்சனா நடராஜன். தன்னுடன் திரையில் யார் நடித்தாலும் தான் மட்டுமே கவனிக்கப்படுவேன் எனும் அளவிற்கு காவல் அதிகாரியாக மிரட்டலான நடிப்பு அவரிடம் வெளிப்பட்டிருக்கிறது. அர்ஜுன் தாஸ் மதுமிதா இடையேயான காதல் காட்சிகள் அழகு.

இவர்களைத் தாண்டி தாயாக பரிதவிக்கும் சிருஷ்டி, பெற்றோரை மதிக்காத சாரா, சிறிது நேரமே வந்தாலும் மிரளச் செய்த அனுபமா குமார், கற்பனை செய்ய முடியாத கதாபாத்திரமாக ஜெயபிரகாஷ், சிறிய வயதில் பெரிய நடிப்பை கொடுத்த நீரவ், பிளாஸ் பேக் பெற்றோர்களாக அர்ச்சனா, படவா கோபி என ஒவ்வொருவரும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருப்பது படத்தை உயிரோட்டமாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான எழுத்து, அதை ஆழமாக திரையில் கொண்டு வந்த முயற்சி ஆகியவை தேவையான பலனை கொடுத்திருக்கின்றன.

கிரைம் திரில்லருக்கு உண்டான திரைக்கதை எழுத்து படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. நாயகனின் கதாபாத்திர பின்புலம் தொடங்கி, அடுத்தடுத்து நடந்த கொலைகளை விவரிப்பது, காட்சிக்கு காட்சி ஆர்வத்தை ஏற்படுத்துவது, மர்மங்களை விடுவிக்கும் இரண்டாம் பாதி என இத்திரைப்படத்திற்கான எழுத்து படத்தை காப்பாற்றி இருக்கிறது. பொதுவாக நம்ப முடியாத அம்சத்தை இணைத்து ரசிகர்களை ஏமாற்றும் திரைப்படங்களுக்கு மத்தியில் சாதாரண விஷயங்களுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தி விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது மதுமிதாவின் எழுத்து. அதிலும் முதல் பாதி இடைவேளை இரண்டாம் பாதிக்கான சரியான அச்சாரம்.

இத்துடன் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் ஒரு சேர கை கொடுத்திருக்கின்றன. பிரீத்தாவின் கேமரா கண்கள் கதையை விட்டு நம்மை வலுவாமல் கடத்தி செல்கிறது. படத்தின் நீளத்தை குறைக்க வாய்ப்பு இருந்தாலும் விஜய் வெங்கட்ரமணனின் படத்தொகுப்பு சிறப்பு. முஜீப் மஜீத்தின் இசை படத்தின் ஆன்மா.

கேரள போலீசாக இருந்து கொண்டு தொடர் புகார்களுக்கு பிறகும் எப்படி அர்ஜுன் தாஸ் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து செயல்படுகிறார் போன்ற கேள்வி எழாமல் இல்லை. எனினும் அது பெரிய அளவு கவனச் சிதறலை ஏற்படுத்தாதது ஆறுதல்.

தமிழில் வெளிவந்த சைக்கோ கிரைம் திரில்லர் வகையிலான படங்களின் வரிசையில் ஜான் டோ கட்டாயம் தனி இடம் பிடிக்கும். நடிப்பு தொழில்நுட்ப பணிகள் ஆர்வத்தை குறைக்காத எழுத்து என நேர்த்தியாக வென்று இருக்கிறது மதுமிதாவின் ஜான் டோ.

John Doe in Search of Mysteries: A Film Review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.