முகப்பு
திரை விமரிசனம்

அதிரடி திருப்பங்கள் நிறைந்த ஆக்டோபஸ்: திரைவிமர்சனம்

இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் நடிகர்கள் அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆக்டோபஸ் இணையத் தொடர் குறித்த விமர்சனம்

26 நவம்பர் 2026, 9:09 pm
ஆக்டோபஸ்
★★★★★ 2.5/5
அதிரடி திருப்பங்கள் நிறைந்த ஆக்டோபஸ்: திரைவிமர்சனம்
ஆக்டோபஸ் இணையத்தொடர் காட்சி
பகிர்:

இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் நடிகர்கள் அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆக்டோபஸ் இணையத் தொடர் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

வாணிமங்கலத்தில் உள்ள அன்பு நகர் குடியிருப்பில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தங்களுக்குள் அன்புடனும் அரவணைப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குடியிருப்புக்குள் புதிதாக அஸ்வின், சித்து குமரேசன் தம்பதியினர் குடியேறுகின்றனர். அனைவரிடமும் சித்து அன்பாக பழகினாலும் அவரது கணவரான அஸ்வின் எவரையும் மதிக்காமல் அவமரியாதை செய்கிறார். இது மட்டுமல்லாது தன்னுடைய மனைவியான சித்துவை குடும்ப வன்முறைக்கும் உள்ளாக்குகிறார். இந்நிலையில் ஒருநாள் இரவு பலத்த சத்தத்துடன் அடங்குகிறது இரவு. அன்றிரவிலிருந்து அனைவரிடமும் அன்பாக பேசிப் பழகிய சித்து காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்க ஒன்று கூடுகிறது அன்பு நகர் குடியிருப்பு. அவர் என்ன ஆனார் என்பதை மர்மங்களுடன் பேசியிருக்கிறது ஆக்டோபஸ்.

சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடருக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. அப்படிப்பட்ட வகையில் நல்லதொரு இணைய தொடராகவே வந்திருக்கிறது ஆக்டோபஸ். சித்து குமரேசனை மையமிட்டு கதை நகர்ந்தாலும் வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ் என பெரிய பட்டாளம் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

கருப்பு, வெள்ளை பக்கங்கள் கொண்ட நாயகனாக வந்திருக்கிறார் அஸ்வின் குமார். முதல் நான்கு அத்தியாயங்களில் வில்லத்தனம் காட்டியிருக்கும் அஸ்வின் அதன் பிறகு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். எரிச்சலூட்டும் அவரது கதாபாத்திரத்தின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குற்றக் கதைகள் மீது ஆர்வம் கொண்ட பெண்ணாக வரும் அர்ச்சனா காணாமல் போன சித்துவை தேடும் இடங்களில் கதையோடு பயணிக்க வைக்கிறார். சித்து அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அனைவரிடமும் அன்பாக பழகும் அதேவேளையில் கணவரிடம் வதைபட்டாலும் அதை காதல் என ஏற்கும் இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். இதற்கு மத்தியில் கல்லூரி கால காதல் கதையாக வினோத் கிஷன்-கலைவாணி பாஸ்கரின் காட்சிகள் ஆர்வத்தை கூட்டுகின்றன. குடியிருப்புவாசிகளாக வரும் நடிகர்களின் குணச்சித்திர நடிப்பு தொடருக்கு பக்கபலமாக உள்ளது.

ஏழு அத்தியாயங்களாக வந்திருக்கும் இந்த இணையத் தொடர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஒவ்வொரு பாகத்தின் இறுதியிலும் சரியாக கடத்தியிருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை இயக்கம் என காட்சிக்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன தொழில்நுட்பப் பணிகள்.

ஒரு கதை திரைக்கதையாக மாறும் போது சரியான உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். அதை சரியாக புரிந்து திறம்பட செய்திருக்கிறார் இயக்குநர். முக்கியமான சமூகப் பிரச்னையை பேசியிருக்கும் இந்த இணையத்தொடர் கிளைமாக்ஸ் காட்சிகளில் சற்று அந்நியமான உணர்வை ஏற்படுத்துகிறது. திருப்பம் நிறைந்த கதை எனினும் அதை இன்னும் நம்பும்படியான காட்சி வடிவத்தில் கடத்த முயற்சித்திருக்க வேண்டும். அனைத்து காட்சிகளிலும் அனைத்து கதாபாத்திரங்களும் வருவது நாயகன் அஸ்வின் கேட்கும் "யாருக்கும் எந்த வேலையும் இல்லையா" எனும் கேள்வியை நமக்குள்ளும் ஏற்படுத்துகிறது.

எனினும் தொய்வில்லாத திரைக்கதை, விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் தவறவிடக் கூடாத இணையத் தொடராக உருவாகி இருக்கிறது ஆக்டோபஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.