பந்தயம் அடிக்குமா சட்டமும் நீதியும் 2? திரை விமர்சனம்
இயக்குனர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இணைய தொடராக வெளியாகியிருக்கிறது சட்டமும் நீதியும் 2.
இயக்குனர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இணைய தொடராக வெளியாகியிருக்கிறது சட்டமும் நீதியும் 2.
சட்டமும் நீதியும் இணையத் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் 18 கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.
வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் தலைவராக உள்ள வரலட்சுமியின் கணவரான இன்ஸ்பெக்டர் பிரேம் காவலர்கள் பங்கேற்ற இரவு மது விருந்தில் கொல்லப்படுகிறார். அவருடன் ஏற்கெனவே மோதலில் இருந்த நான்கு காவலர்கள் மீது கொலை பழியின் சந்தேகம் திரும்புகிறது. தனது கணவருக்காக வழக்கை முன்னெடுக்கிறார் வரலட்சுமி.
Advertisement
Advertisement
வரலட்சுமி பார் கவுன்சில் தலைவர் என்பதால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக எந்த வழக்குரைஞரும் ஆஜராகாத நிலையில் வழக்குகள் இல்லாமல் தவிக்கும் நேர்மையான வழக்குரைஞரான சரவணன் ஆஜராகிறார்.
இந்த வழக்கின் முடிவு என்ன? இன்ஸ்பெக்டர் பிரேமை கொன்றது யார்? என பேசுகிறது சட்டமும் நீதியும் 2.
மொத்தம் ஆறு அத்தியாயங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நேர்மையான வழக்குரைஞராக வந்துள்ள சரவணன் இந்த இணையத் தொடரின் முதல் பாகத்திலேயே கவனம் ஈர்த்திருந்தார். அதன் சூடு குறையாத வண்ணம் இரண்டாம் பாகத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஒரு வழக்குரைஞராக நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக வாதாடுவது தொடங்கி, தவறு ஏற்படும் போது குற்ற உணர்ச்சியால் கூனி குறுகுவது வரை சரவணனின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. வழக்கு இல்லாமல் மனைவியிடம் திட்டு வாங்குவதும், வழக்கிற்காக ஆதாரங்களை திரட்டுவதும் என நேர்மையாளன் ஜெயிப்பதற்கு படும் போராட்டங்களைக் காட்சிகளாக கண்முன் கொடுத்திருக்கிறார் சரவணன்.
மிடுக்கான வழக்குரைஞராக வரும் வரலட்சுமி ஏற்றிருப்பது கனமான கதாபாத்திரம். எனினும் அவரின் முந்தைய திரைப்படங்களின் சாயல் இதில் தெரிவது சற்று தொய்வானது. தனது கணவர் நேர்மையற்றவர் என்பதை அறியும் கணங்களில் அவர் உடைந்து நிற்பது கவனிக்கச் செய்கிறது. இவர்களுடன் லாவண்யா, பிரேம்குமார், கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறு பாலா, சந்திரன், சிவின், பருள் சம்பாரியா, பவன், அக்ஷயா, பிரியங்கா ரோபோ சங்கர், அபர்ணா என பலர் நடித்துள்ளனர்.
நான்கு காவல் அதிகாரிகளாக வரும் கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறு பாலா, பீட்டர் சந்திரன் ஆகியோரின் நடிப்பு விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.
பின்னணி இசையும், ஒளிப்பதிவும் இணைய தொடரின் தரத்தை உயர்த்தப் பாடுபட்டிருக்கின்றன.
நீதிமன்றக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும் அதே சமயத்தில் குறுகிய நேரம் மட்டுமே இருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் நீளம் ஒரு கவனச் சிதைவை ஏற்படுத்துகிறது. இரவு முழுக்க குடித்துவிட்டு ஆட்டம் போடும் காவல் அதிகாரிகள் நீதிமன்றங்களில் அதை ஒப்புக்கொள்ளும் காட்சிகளில் லாஜிக் இடிக்கின்றன. பொதுவாக முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்றங்களில் கலந்துகொண்டு பாடம் எடுப்பர். ஆனால் வழக்குகளே கிடைக்காமல் தவிக்கும் சரவணன் எப்படி நீதிபதியாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார் என்பது கேள்வியாக எழுகிறது.
தனது கணவர் முறை தவறியவர் என வரலட்சுமிக்கு தெரிந்த பிறகும் விடாப்பிடியாக கணவருக்காக போராடுவது ஏன் என்பதை காட்சியாக விவரித்து இருக்கலாம். கணவருடன் மோதல் இருக்கும் வரலட்சுமிக்கு காதலுக்காக போராடும் நாயகியான வேஷம் ஏன் என்பதை சொல்லவில்லை. ஐந்தாம் அத்தியாயத்திலேயே கிளைமாக்ஸ் எடுபட்ட பிறகு வழிந்து திணிக்கப்பட்டதாக ஆறாவது அத்தியாயம் இருப்பதை படத்தொகுப்பாளர் கவனித்திருக்கலாம்.
லாஜிக் மீறல்களைத் தாண்டி ஒரு விறுவிறுப்பான திரைக்கதையோடு வெளியாகி இருக்கும் சட்டமும் நீதியும் 2 இணையத் தொடர் ஏமாற்றம் அளிக்காது என்பதால் தவறாமல் முயற்சிக்கலாம்.
sattamum nedhiyum 2, directed by Balaji Selvaraj and starring Paruthiveeran Saravanan and Varalaxmi Sarathkumar, has been released as a web series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.