முகப்பு

விவசாயமும் பயில்வோம்!

இன்றைய இளைய தலைமுறையினரிடம் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

27 நவம்பர் 2026, 4:36 am
விவசாயமும் பயில்வோம்!
விவசாயம் - கோப்புப் படம்
பகிர்:

பெ.நா. மாறன்

இன்றைய இளைய தலைமுறையினரிடம் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்; தசைகளை வலிமைப்படுத்த வேண்டும்; உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கங்களுடன் பலரும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்கின்றனர். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் எனப் பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். உடல்நலனைப் பேணுவதில் இத்தகைய பயிற்சிகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

இவர்களை கார்ப்பரேட் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர்கள் மிகச் சிறப்பாக மூளைச்சலவை செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

புரோட்டீன் பவுடர், டம்பல்ஸ், டிரெட்மில் போன்றவற்றை எல்லாம் பணத்தைக் கொட்டி வாங்கி உடலை வளர்க்கும் ஒரு நுகர்வு கலாசாரத்தில் இவர்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். இயற்கையான சூழலில், மண்ணோடு மண்ணாக உழைப்பதன் மூலம்கூட உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு இவர்களுக்கு ஊட்டப்படவில்லை.

இளைஞர்களின் உடல் உழைப்பை அவர்களுடைய தனிப்பட்ட உடல் நலனுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்காமல், சமூகத்துக்கும் பலனளிக்கும் வகையில் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. அதற்கான ஒரு சிறந்த வாய்ப்புதான் விவசாயம்.

உடற்பயிற்சிக் கூடங்களில் கண்ணாடிக் கூண்டுக்குள் செயற்கையான இயந்திரங்களுடன் போராடுவதைவிட, இயற்கையான சூழலில் வயலில் வேலை செய்வது மன அழுத்தத்தை முற்றிலுமாகப் போக்கி ஆழ்ந்த நிம்மதியைத் தரும்.

ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிட்டு தன்னுடைய உடலுக்காக உழைக்கும் ஓர் இளைஞர் அதே நேரத்தை விவசாய நிலத்தில் செலவிட்டால், அவருடைய உடலுக்கும் பயிற்சி கிடைக்கும்; விவசாயிக்கும் உதவியாக இருக்கும்; உணவு உற்பத்தியின் பின்னணியையும் புரிந்துகொள்ள முடியும்.

நிலத்தை உழுதல், நாற்று நடுதல், களை பறித்தல், அறுவடை செய்தல், விளை பொருள்களைச் சேகரித்தல் போன்ற விவசாயப் பணிகள் உடலின் பல்வேறு தசைகளை ஒரே நேரத்தில் இயக்குகின்றன. குனிதல், நிமிர்தல், நடத்தல், கைகளால் வேலை செய்தல், பொருள்களைத் தூக்குதல் என உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் தொடர்ச்சியான இயக்கம் கிடைக்கிறது.

விவசாயப் பணிகள் அனைத்தும் எளிதானவை என்றோ, உடற்பயிற்சிக் கூடத்தில் கிடைக்கும் எல்லா உடற்பயிற்சிப் பலன்களும் வயலில் கிடைத்துவிடும் என்றோ கூற முடியாது. ஆனால், உடலுக்குத் தேவையான இயக்கத்தை வழங்குவதுடன், உழைப்பின் மூலம் சமூகப் பயனையும் உருவாக்கும் வாய்ப்பு விவசாயத்தில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய தலைமுறையில் பலருக்கும் விவசாயம் என்பது உணவுப் பொருள்கள் கடைகளில் கிடைப்பதற்கு முன்பு நடைபெறும் ஒரு செயல்முறை என்ற அளவிலேயே தெரிந்திருக்கிறது. நெல் எப்படி விளைகிறது; பயிரிடுவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது; ஒரு பயிர் அறுவடைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகின்றன; மழை பொய்த்தாலோ பெருமழையாய்க் கொட்டினாலோ விவசாயி எதிர்கொள்ளும் இழப்பு என்ன என்பன போன்ற கேள்விகளுக்குப் பல மாணவர்களிடம் நேரடி அனுபவத்தின் அடிப்படையிலான பதில்கள் இருக்க வாய்ப்பில்லை.

ஒரு மாணவர் விவசாயியுடன் வயலில் வேலை செய்தால் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் புத்தகத்தில் படிக்காமல் அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். நாற்று நடும்போது அதன் பின்னணியில் இருக்கும் பொறுமையை உணர்வார். களை பறிக்கும்போது பயிரைப் பாதுகாப்பதில் உள்ள சிரமத்தைப் புரிந்துகொள்வார். அறுவடை செய்யும்போது ஒரு

கைப்பிடி நெல் நம் உணவுத் தட்டுக்கு வருவதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பை மதிக்கக் கற்றுக் கொள்வார். இதன்மூலம் விவசாயத் தொழிலின் மீதான மரியாதை அதிகரிக்கும். விவசாயம் என்பது படிக்காதவர்கள் செய்யும் தொழில் என்ற தவறான சமூகப் பார்வையும் மாறும். படித்த இளைஞர்களுக்கும், விவசாயத்துக்கும் இடையிலான இடைவெளி குறையும்.

இதற்கு முதல்படியாக கல்லூரிகளில் புதிய மாணவர் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் 38 மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளை இந்த இயக்கத்துடன் இணைக்க வேண்டும். குறிப்பாக, விவசாய சாகுபடி பரப்பு அதிகமுள்ள திருவண்ணாமலை, திண்டுக்கல், தூத்துக்குடி, சேலம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒவ்வொரு கல்லூரியும் தங்களுக்கு அருகிலுள்ள ஒரு விவசாயக் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள விவசாயிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். கல்லூரி மாணவர்களைக் கொண்ட தன்னார்வக் குழுவை உருவாக்கி, மாதத்துக்கு இரண்டு நாள்கள் விவசாயப் பணிகளில் நேரடியாகப் பங்கேற்க ஏற்பாடு செய்யலாம். இதற்குப் பெரிய அளவிலான நிதி முதலீடு தேவையில்லை. கல்லூரி நிர்வாகம், மாணவர் அமைப்புகள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்டம், உள்ளூர் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டால் போதுமானது.

ஒவ்வொரு மாணவரும் ஓர் ஆண்டில் குறைந்தது 20 நாள்களாவது விவசாயப் பணிகளில் பங்கேற்கும் வகையில் திட்டமிடலாம். ஒரு கல்லூரியில் 50 மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டால், அந்தக் கல்லூரியிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 1,000 மாணவர் - நாள்கள் விவசாயப் பங்களிப்பு கிடைக்கும். இதேபோல், 30 கல்லூரிகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் 1,500 மாணவர்கள் விவசாயத்துடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள்; இது ஒரு சிறிய தொடக்கமாக இருந்தாலும், அதன் சமூகத் தாக்கம் பெரியதாக இருக்கக் கூடும்.

மாணவர்களின் விவசாயப் பங்கேற்பு, அந்தந்தப் பகுதியின் பயிர் சாகுபடிப் பருவத்துக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். நாற்று நடும் காலத்தில் நாற்று நடுதல், களை எடுக்கும் காலத்தில் களை பறித்தல், அறுவடைக் காலத்தில் அறுவடைப் பணிகளுக்கு உதவுதல் எனப் பணிகளைத் திட்டமிடலாம். நெல் சாகுபடி மட்டுமல்லாமல், நிலக்கடலை, சிறுதானியங்கள், கரும்பு, வாழை, மா, காய்கறிகள் போன்ற பயிர் சாகுபடிகளிலும் மாணவர்கள் ஈடுபடலாம்.

விவசாயிகள் தங்களுடைய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். விதைத் தேர்வு, மண் வளம், நீர் மேலாண்மை, இயற்கை உரம், பயிர்ப் பாதுகாப்பு, சந்தைப்படுத்துதல் போன்றவற்றையும் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு விவசாயம் என்பது வெறும் உடல் உழைப்பாக இல்லாமல், அறிவியல், பொருளாதாரம், மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான அனுபவக் கல்வியாக மாறும்.

இந்த இயக்கம் விவசாயிகளின் ஒப்புதலுடன், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அவர்களுக்குத் துணையாகச் செயல்படுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இதனால், எதிர்காலத்தில் தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், மேலாண்மை ஆகிய துறைகளில் கல்வி பயிலும் இளைஞர்கள் விவசாயத்துக்கான புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஆர்வம் காட்டலாம்.

விவசாயம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடையது என்ற உணர்வும் உருவாகும். இதை ஒரு கல்லூரியின் தனிப்பட்ட முயற்சியாக மட்டும் நிறுத்திவிடாமல், தமிழ்நாடு முழுவதும் உயர் கல்வித் துறை, வேளாண்மைத் துறை மற்றும் இளைஞர் நலத் துறை இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டமாக முன்னெடுக்கலாம்.

இன்றைய கல்வி முறை மாணவர்களுக்குப் பட்டம் வழங்குகிறது. உடற்கல்வி அவர்களுக்கு உடல் நலனை அளிக்க முயற்சிக்கிறது. சமூக சேவை அவர்களுக்கு சமூகப் பொறுப்பை உணர்த்துகிறது. ஆனால், இந்த மூன்றையும் ஒரே இடத்தில் இணைக்கக்கூடிய வாய்ப்புதான் விவசாயம். உடற்

பயிற்சியை சமூகப் பொறுப்புடன் இணைப்போம்; இளைஞர்களை விவசாயத்துடன் இணைப்போம்; விவசாயியின் உழைப்பை மதிக்கக் கற்றுக்கொடுப்போம். ஏனெனில், விவசாயம் செழித்தால்தான் சமூகம் செழிக்கும்; விவசாயியை மதிக்கும் தலைமுறையால்தான் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர். (குறள் 1034)

(பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்) என்கிற வள்ளுவரின் வார்த்தைகள் வெறும் அச்செழுத்து அளவில் இல்லாமல் விவசாயிகளே பெருமையுடன் தன்னம்பிக்கையுடன் உணரும் வகையில் செய்ய இந்த முன்னெடுப்பால் மட்டுமே முடியும்.

விவசாயத்துக்காக நிதிநிலை அறிக்கையில் அரசு நிதி ஒதுக்கி செலவழிப்பதில் பெரும் பங்கு விவசாயிகளைச் சென்று சேராத நிலை உள்ளது. அதுகுறித்த தெளிவுகூட இல்லாத அப்பாவிகளாக விவசாயிகள் இருக்கிறார்கள்.

விழிப்புணர்வு பெற்ற இளைஞர்கள் வழிநடத்த முன்வந்தால், விவசாயிகளின் அப்பாவித்தனத்தை மூலதனமாக்கி நடைபெறும் மறைமுக ஊழல்கள் ஒழிந்து அவர்களின் வாழ்வில் ஒளி உண்டாகும். அவர்களின் நியாயமான அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேற வழிபிறக்கும். இளைஞர்களின் சிந்தனைகளில் உதிக்கும் புதிய உத்திகள், விவசாயத்தில் அரசின் நிதி மேலாண்மைக்கு நேர்மறை நன்மதிப்பு கிடைக்கும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.