FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

'இறைமாட்சி' எனத் தலைப்பிட்டது ஏன்?

மூதறிஞர் இராஜாஜியும், வீரத் தியாகி ஓமந்தூராரும், கர்மயோகி காமராசரும் நடந்து காட்டிய பாதையில் மலர்களைத் தூவாவிட்டாலும், முட்களைத் தூவாமல் இருக்கலாமே!

15 அக்டோபர் 2026, 1:40 am IST
செங்கோல் - தினமணி
பகிர்:

உலகத்துக்கே பொதுமறையை இயற்றிக் கொடுத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருட்பாலில் முதல் அதிகாரத்துக்கு 'இறைமாட்சி' எனப் பெயரிட்டது ஏன் என்று, காலங்கள் தோறும் ஆய்வாளர்கள் சிந்தித்தவாறு உள்ளனர்.

முதன்முதலில் இக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர், (பெருமாள் சந்நிதியில் துவாரபாலகர் நின்று காத்தல் போல) உலகபாலர் உருவாய் நின்று உலகங்காத்தலின் 'இறை' என்றார். அறக்கோட்பாட்டின் வழிநின்று நீதி தவறாது ஆட்சி நடத்துகின்ற ஓர் அரசனைக் கண்டால், பெருமாளைப் பார்த்ததுபோல் ஆகும் என்பது இதன் பொருள்.

நாட்டை ஆள்கின்ற அரசன் அங்கு வாழ்கின்ற உயிர்களுக்கு எல்லாம் கண்ணாகவும் உயிராகவும் இருக்க வேண்டும் என்பதைத் தெய்வச் சேக்கிழார், 'மண்ணில் வாழ்கின்ற மண்ணுயிர்கட்கு எல்லாம், கண்ணும் ஆவியும் ஆம்பெருங்காவலன்' எனும் பாடல்வழி புலப்படுத்துகின்றார்.

Advertisement

Advertisement

ஒரு மன்னன் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதைக் கம்ப நாட்டாழ்வார், 'அன்பைச் செலுத்துவதில் மன்னன் தாய்போல் இருக்க வேண்டும்; நன்மை செய்வதில் தவம்போல் இருக்க வேண்டும்; தாய் தந்தையரைப் போற்றிப் பாதுகாப்பதில் பெற்ற பிள்ளைகள்போல் இருக்க வேண்டும்; குடிமக்கட்கு நோய்வருமாயின், மருந்துபோல் இருக்க வேண்டும்; நுட்பமானவற்றை ஆராயப்புகுகின்ற மக்களுக்கு, நுண்ணறிவைப்போல் இருக்க வேண்டும்' என அரசமைப்புச் சட்டம்போல் வகுத்துச்சொல்கிறார் (பாடல் 171 - அரசியல் படலம்).

அறக்கோட்பாடு இல்லாத மன்னருடைய ஆட்சி, எப்படி எல்லாம் சீரழிந்து சிதைந்து போகும் என்பதை மகாகவி பாரதியார், 'பாஞ்சாலி சபதத்தில்' படைத்துக் காட்டுகிறார். கௌரவமே இல்லாத கௌரவர் சபைதனில் மானபங்கப்படுத்தப்பட்ட பாஞ்சாலி, 'கௌரவ வேந்தர் சபைதன்னில் - அறங்கண்டவர் யாரும் இல்லையோ? மன்னர் செüரியம் வீழ்ந்திடும் முன்னரே - அங்குச் சாத்திரம் செத்துக் கிடக்குமோ? மாண்பதைக் காக்கும் அரசர்தாம் - அறமாட்சியைக் கொன்று களிப்பரோ' என வீரகர்ஜனை புரிகிறாள்.

தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சித்தலைவருக்கோ, வம்சாவளியாக வரும் அரசருக்கோ எந்த நாட்டிலும் தகுதிப்பாடுகள் சொல்லப் பெறவில்லை. கென்யா நாட்டில் மட்டுந்தான், தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமன்ற பிரதிநிதி, பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது.

ஆனால், திருவள்ளுவர் ஒருவர்தாம் வம்சாவளியாக வரும் அரசருக்கு 25 அதிகாரங்களில் தகுதிப்பாடுகளை வரையறை செய்து, வகுத்துச் சொல்லுகிறார். நீதிநெறியுடன் ஆட்சி நடத்துகிற மன்னவன்தான், இறைவனுக்குச் சமமாக வைக்கப்படுவான் என்பதை, 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு, இறையென்று வைக்கப் படும்' எனும் குறட்பா மூலம் விளக்குகின்றார். இதனுடைய உட்பொருள் என்னவென்றால், நீதிநெறி தவறி அரசாண்டால், வைக்கப்பட்ட மன்னன் எடுக்கப்படுவான் என்பது பொருள்.

ஓர் ஆட்சியின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் செங்கோலே சான்று. பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கோட்பாட்டின்படி ஆட்சி நடத்தியதால், அவன் நாட்டில் 'மறையோர்கள் ஓதும் வேத ஓசை அல்லது ஆராய்ச்சி மணியின் ஓசை எழுந்ததே இல்லை' என்பார் இளங்கோவடிகள். அந்நாட்டில் ஒரு பொற்கொல்லன் நிகழ்த்திய களவால், வளையாத செங்கோலும் வளைந்தது; தாழாத வெண்கொற்றக் குடையும் தாழ்ந்தது; ஒட்டுமொத்தமாகப் பாண்டி மண்டலமே பற்றி எரிந்தது.

திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு அறநெறி தவறாது அரசாண்டதால், மற்ற மற்ற மன்னர்களும் மனுநீதிச்சோழனை வியந்து பாராட்டினர் என்பதைத் தெய்வச் சேக்கிழார், 'அறம்பொருள் இன்பமான அறநெறி வழாமற் புல்லி, மறங்கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்' எனப் பாடுகிறார், பெரியபுராணத்தில். ஆனால், அந்தச் சோழனுக்கு மகனால் ஒரு பழி வந்ததால், 'செவ்விது என் செங்கோல்' என்று தனக்குள்ளே தன்னை நகையாடி நொந்து கொண்டானாம், அம்மன்னன். மேலும், 'அரிய மருந்து போன்ற அரசாட்சி எளிதில்லை; அரிது' எனத் தனக்குள்ளே கூறிக் கொண்டானாம், அந்த மாமன்னன்.

செங்கோல் வளையாமல் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதற்காகச் சர்வபரித்தியாகம் செய்த மன்னர்களும் நம் நாட்டில் உண்டு. 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதில், கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அவர்கள் கட்டிய காளையார்கோயில் கோட்டையை கிழக்கிந்திய கும்பினியார் கைப்பற்றிய போதிலும், மருது சகோதரர்கள் உடைமரக் காடுகளில் பதுங்கியிருந்து 'கொரில்லாப் போரை' நிகழ்த்தினர். அடுத்த சில நாள்களில் மருது பாண்டியர்கள் சரணடையவில்லை என்றால், காளையார்கோயிலை இடித்து விடுவதாகச் சீமை முழுவதும் பறையறைந்தனர் ஆங்கிலேயர்.

உயிரைக் கொடுத்தாவது காளையார்கோயிலைக் காப்பாற்றத் தீர்மானித்த மருது சகோதரர்கள், திருப்பத்தூரில் சரணடைந்தனர். 1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24- ஆம் தேதி மருது சகோதரர்களைப் பொதுமக்கள் முன் ஆங்கிலேயர் தூக்கிலிட்டினர். தெய்வ பக்திக்காகவும் தேச பக்திக்காகவும் உயிரைக் கொடுத்த மருது சகோதரர்கள்தாம், இறைமாட்சிக்கு ரத்த சாட்சி! எப்போதும் சிவந்திருக்கும் சிவகங்கை மண், மருது சகோதரர்களால் மீண்டும் ஒருமுறை சிவந்தது.

கி.பி.1713-இல் ராமநாதபுரத்திலிருந்து சேதுபதிச் சீமையை ஆண்ட மன்னர் விஜயரகுநாத சேதுபதி. அவருக்கு சீனி நாச்சியார், லட்சுமி நாச்சியார் என இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் இருவரையும் தூரத்து உறவினரான தண்டத்தேவருக்குச் சேதுபதி மணம் செய்து வைத்தார். தமது மாப்பிள்ளை தண்டத்தேவரை ராமேசுவரம் தீவுக்கு ஆளுநராகவும் நியமித்தார் மன்னர்.

யாழ்ப்பாணத்திலிருந்தும், சேதுபாதை வழியாகவும் பக்தர்கள் மண்டபம் தோணித் துறையில் வந்து தங்குவர். அங்கிருந்து தோணி வழியாகக் கடலைக் கடந்து, ராமேசுவரம் சென்று இறை வழிபாடு செய்வர். 'தோணிப் பயணத்துக்கு எந்தத் தொகையும் வசூலிக்கக் கூடாது' என்பது காலங்காலமாகச் சேதுபதிகள் வரைந்து வைத்திருக்கும் சட்டம். மீறி யாராவது வசூலித்தால், அதைச் சிவத்துரோகமாகக் கருதி அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்.

ஆனால், முதல் முதலாகச் சேதுபதி தம்முடைய மாமனார் என்ற மமதையில், தண்டத்தேவர் தோணிப் பயணிகளிடம் ஒரு சிறிய தொகையைச் சுங்கவரியாக வசூலித்தார். இச்செய்தி சேதுபதியின் கவனத்துக்குச் செல்லவே, தண்டத்தேவரை ராமநாதபுரம் வரவழைத்து நீதி விசாரணை நடத்தினார். விசாரணையில், தண்டத்தேவரின் குற்றம் வெளிப்படவே, தமது மாப்பிள்ளை என்றும் பாராமல், அவருக்கு 'மரண தண்டனை' விதித்தார். ஐம்பெருங்குழுவால் விதிக்கப்பட்ட தண்டனை, சேனாபதியால் பொதுமக்கள் முன் தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

துக்கம் தாங்காமல் சேதுபதியின் மகள்களும், தண்டத்தேவரின் மனைவிகளுமான இருவரும் பொதுமக்கள்முன் தீக்குளித்தனர். தீக்குளித்த இருவரின் இடங்களும் இன்றைக்கும் அக்கா மடம், தங்கச்சி மடம் என வழங்கப்படுகின்றன. 'மன்னர் அறம் புரிந்தால், வையகமே மாட்சி பெறும்' எனப் பாரதி பாடிய வரி, மீண்டும் ஒருமுறை புத்துயிர் பெற்றது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வெந்தும், நூலோர்கள் செக்கடியில் நொந்தும் பெற்ற சுதந்திரத்தை இன்றைய ஆட்சியாளர்கள் ஆக்சிஜன் சிலிண்டரில் தொங்கவிட்டுவிட்டனர்.

நாம் வாழும் மண்ணிலும் ஆட்சிமன்றங்கள் அவலநிலைக்குச் சென்றுவிட்டன. இராமாயணத்திலே ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. சீதாபிராட்டியை இராவணன் அடிமண்ணோடு பெயர்த்துத் தூக்கிச் சென்றபோது, பிராட்டி தாம் செல்லும் பாதையை இராம இலக்குவனர்களுக்கு உணர்த்துவதற்காகத், தாம் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றிப் போட்டுக் கொண்டே போனார்.

ஆனால், அந்த நகைகளையும் தேடிப்பிடித்த கிஷ்கிந்தை வானரங்கள், தலையிலே அணிய வேண்டியதைக் காலிலும், காலிலே அணிய வேண்டியதைத் தலையிலும், மூக்கிலே அணிய வேண்டியதை விரல்களிலும், தோளிலே அணிய வேண்டியதை வாலிலும் அணிந்து எம்பிக் குதித்துக் கூத்தாடி மகிழ்ந்தனவாம். அதைப்போல சில ஆட்சிமன்றத்தில் இடம் பெற்றவர்கள், வாயாலே பேச வேண்டியதைக் கையாலும், கரங்களால் காட்ட வேண்டியதை சிரங்களாலும் காட்டி வேடிக்கை காட்டுகின்றனர். சில ஆட்சிமன்றங்கள் சர்க்கஸ் கூடாரங்களாகவே ஆகிவிட்டன.

போற்ற வேண்டியவற்றைப் போற்றியும், கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டித்தும் வாழ வேண்டிய நாகரிகத்தை மகாகவி பாரதியார், 'வேல்ஸ் இளவரசர் வரவேற்பு' எனும் தலைப்பில் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இப்போது அதைப் படிக்காவிட்டால், நாம் எப்போது படிப்பது?

மூதறிஞர் இராஜாஜியும், வீரத் தியாகி ஓமந்தூராரும், கர்மயோகி காமராசரும் நடந்து காட்டிய பாதையில் மலர்களைத் தூவாவிட்டாலும், முட்களைத் தூவாமல் இருக்கலாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments