FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்சார நெருக்கடி: தேவையின் உயர்வா, நிர்வாகத்தின் அயர்வா? விரிவான அலசல்!

மின்சார நெருக்கடி: தேவையின் உயர்வா, நிர்வாகத்தின் அயர்வா என்பதைப் பற்றி...

26 அக்டோபர் 2026, 2:46 am
பகிர்:

தமிழகத்தில் மின்சாரத் தேவை எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ள நிலையில், மின் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 வரை கொடுத்து வாங்க அரசு முடிவு செய்தது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் உள்ள தமிழ்நாடு மின்வாரியம், இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய தேவை என்ன? ஏன் இந்த நிலைமை? ஏன் இத்தகைய நெருக்கடி? மாநிலத்தின் மின் தேவை அதிகரிக்கும் என்பதைக் கணித்து தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும், தேவையானதை முன்னதாக கொள்முதல் செய்வதிலும் திட்டமிடல் என்பதே இல்லையா?

தமிழகத்தின் மின்சார நிர்வாகத்தை நோக்கி எழுப்பப்படும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை காண வேண்டுமெனில் , மின் உற்பத்தித் திறன், நிஜத்தில் உற்பத்தி அளவு, உச்சநேரத் தேவை, சந்தை விலை நிர்ணயம், கொள்முதல் ஒப்பந்தங்கள் ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Advertisement

Advertisement

வெப்பநிலை உயரும்போது மக்களின் மின் பயன்பாடு அதிகரிக்கிறது. மின் தேவையும் கூடுகிறது. அந்தந்த நாளில் ஏற்படும் மின்தேவைக்கு நம் உற்பத்தியில் தட்டுப்பாடு இருந்தால், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மக்களுக்கும் தொழிற்கூடங்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சத் தேவை சுமார் 17,000 மெகாவாட். நடப்பு ஆண்டில் அக்டோபரில் மின்சார உச்சத் தேவை 21,700 மெகாவாட். சுமார் 29% அதிகரித்துள்ளது. இதனால்தான் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது என்று மின்வாரியம் கூறுகிறது. அவ்வாறு வெளிச்சந்தையில் வாங்கப்படும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.33 முதல் ரூ.37 வரை விலை கொடுக்கவேண்டி இருக்கிறது என்பதே தற்போதைய சர்ச்சையின் மையப்புள்ளி.

இந்திய மின் பரிவர்த்தனைச் சந்தையில், இந்திய மின்சாரப் பரிவர்த்தனை நிறுவனத்தின் ஒருநாள் முன்கூட்டிய சந்தையில் 2026 செப்டம்பர் மாத சராசரி விலை யூனிட் ரூ.7.30. தினசரி சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை ரூ.6.90-ஆக இருந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, தமிழக அரசு, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிக விலைக்கு, அதாவது ரூ.13 முதல் ரூ.35 வரை விலை கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

மின்சாரச் சந்தையில் விலை என்பது நேரத்துக்கேற்ப மாறும் தன்மை கொண்டது. தக்காளி வரத்து குறைவாக இருந்தால் கிலோ ரூ.100 வரை உயரும். அதிகமாக உற்பத்தி என்றால் ரூ.20-க்கும் கிடைக்கும். மின்சாரமும், நம் தேவை, அவசரத்துக்கு ஏற்ப விலை மாறுகிறது.

அதே வேளையில், ஆண்டு முழுவதும் சில டன் தக்காளியை குறிப்பிட்ட விலைக்கு தர வேண்டும் என்று முன்னதாகவே ஒப்பந்தம் செய்து கொள்ளும் காய்கனி கொள்முதல் வணிகர்களைப் போல, மின்வாரியமும் ஆண்டு முழுவதற்கும் சராசரி விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடுவது சாத்தியமே. மின்வாரியம் அதைச் செய்வதில்லை. கடைசி நேரத்தில் தீர்மானித்து அதிக விலைக்கு வாங்குகிறது. இதன் பின்னணியில் ஊழல் இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

சந்தையின் சராசரி விலை ரூ.7.30 என்பதால், தமிழகத்துக்குத் தேவையான அனைத்து மின்சாரத்தையும் மாலை நேர உச்சபட்ச மின் தேவை நேரத்தில் அதே விலையில் வாங்கியிருக்கலாம் என்று கூறுவது சரியானதாக இருக்காது என ஆளும் கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் மின்கொள்முதலில் உள்ள அறிவார்ந்த நுட்பம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் காணப்படுவதில்லை என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை. இது இந்த அரசு என்பதல்ல. இதற்கு முந்தைய அரசுகள் அனைத்திலும் இதே நிலைமைதான் இருந்தது.

இத்தகைய அவசரத் தேவைகள் மற்ற மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளன. ஆந்திர பிரதேச மின் ஒருங்கிணைப்புக் குழு அக்டோபர் தேவைக்காக யூனிட் ரூ.16 முதல் ரூ.20 வரை விலையுள்ள சில ஒப்பந்தங்களை இறுதி செய்திருந்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் தமிழகத்தின் ஒப்பந்த விலைகள் இதைவிட அதிகமாக இருப்பது ஒப்பீட்டு அளவிலான கேள்விகளுக்கு வழிகோலியுள்ளது.

ஆந்திரம் அக்டோபர் மாதத் தேவைக்கான ஏலங்களை செப்டம்பர் 9-ஆம் தேதியே இறுதி செய்திருந்தது . தமிழகம் அக்டோபர் 12 முதல் தேவைப்படும் மின்சாரத்துக்கான ஒப்பந்தங்களைச் செய்ய, அதற்கு ஒரு வாரம் முன்புதான் ஏலம் கோரியதாகக் கூறப்படுகிறது. மின்சாரத் தேவை அதிகரிக்கும் காலத்தை முன்கூட்டியே கணித்து ஒப்பந்தம் செய்திருந்தால், அதிக விலை கொடுத்து அவசரமாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கிறது.

அதே சமயத்தில், ஆந்திரத்தின் விலையை மட்டும் வைத்து தமிழகத்தின் கொள்முதல் விலை தவறு என்று கூறுவதும் சரியாக இருக்காது. ஏனெனில், இரண்டு மாநிலங்களின் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்ட காலம், மின்சாரத்தை வழங்கும் நேரம், வழங்குநரின் தன்மை, மின்சாரத்தின் வகை, ஒப்பந்த நிபந்தனைகள் ஆகியவையும் விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மின் தேவை அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பது புதிதல்ல. ஆகவே, மின் ஒப்பந்த ஏற்பாடுகளை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை?. அதேசமயத்தில், மின்சார உற்பத்தி ஏன் அதிகரிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

மாநிலத்தின் நிறுவப்பட்ட மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட மொத்த மின் திறன் 47,238 மெகாவாட் என தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

மொத்த மின் திறன் 47,238 மெகாவாட், அதிகபட்ச மின் தேவை சுமார் 22,000 மெகாவாட். தேவையைவிட இரு மடங்குக்கு உற்பத்தித் திறன் நம்மிடம் இருக்கையில் ஏன் உற்பத்தி செய்யவில்லை? ஏன் யூனிட் ரூ.35 வரை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டும்? என்கிற கேள்விகள் எழலாம்.

47,238 மெகாவாட் என்பது தமிழகத்தில் ஒரே நேரத்தில் உறுதியாக உற்பத்தி செய்து பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் அளவு அல்ல. அது, காற்றாலை, சூரிய மின்சாரம், மத்திய மின் நிலையங்களின் பங்கு மற்றும் ஒப்பந்த மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் திறன்களின் மொத்த அளவாகும். அந்த முழுத் திறனும் ஒரே நேரத்தில் கிடைக்கும் என்று கருத முடியாது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டால்தான் மின் பற்றாக்குறையின் உண்மையான காரணத்தை ஆராய முடியும்.

அதேநேரத்தில், கிடைக்கக்கூடிய திறனுக்கும், உச்ச தேவைக்கும் இடையிலான இடைவெளியைத் துல்லியமாகக் கணக்கிட்டு, குறைந்த செலவில் மின்சாரத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்வது மின்வாரியத்தின் நிர்வாகப் பொறுப்பு. எனவே, தற்போதைய நெருக்கடி உண்மையான மின் உற்பத்திப் பற்றாக்குறையால் ஏற்பட்டதா, அல்லது தேவையான நேரத்தில் மின்சாரத்தைப் பெறுவதற்கான திட்டமிடல் போதுமானதாக இல்லாததால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.

உடனடியாக மின்சாரம் வாங்கி விநியோகத்தைத் தடையின்றித் தொடர்வது ஒரு நிர்வாகத் தேவை. அதேநேரத்தில், அந்த மின்சாரம் எந்த விலையில் வாங்கப்படுகிறது?, கொள்முதல் எந்த அளவுக்கு அவசியமானது?, அதனால் மின்வாரியத்துக்கு ஏற்படும் நிதிச் சுமையை எவ்வாறு நிர்வகிப்பது? என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏன் இவ்வளவு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டியதும் அரசின் கடமையாகும்.

அந்தப் பொறுப்பை உணர்ந்து, சீரான, வெளிப்படைத்தன்மை வாய்ந்த நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தடையற்ற மின்சாரம், நியாயமான கொள்முதல் விலை, நீண்டகாலத் திட்டமிடல், பொதுநிதிப் பொறுப்பு ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுப்பதே எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் தடுக்க உதவும்.

எனவே, அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது என்ற தகவலை மட்டும் வைத்து, அந்த முடிவு தவறானது என்று முடிவெடுக்க முடியாது. அதேபோல், மின்வெட்டைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதற்காக எந்த விலையிலும் மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தவும் முடியாது.

அரசின் பொறுப்பு மின்சாரம் வாங்குவதுடன் முடிந்து விடுவதில்லை; எதிர்காலத் தேவையைக் கணித்து உற்பத்தியைத் திட்டமிடுதல், நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களைச் சரியாகப் பயன்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை ஒருங்கிணைத்தல், மின்வாரியத்தின் நிதிநிலையைப் பாதுகாத்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கிய நிர்வாகத் திறனை வெளிப்படுத்துவதும் அரசின் முக்கியக் கடமையாகும்.

அரசு செய்ய வேண்டியது என்ன மின் உற்பத்தியை அதிகரித்தல்: மாநிலத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால மின் தேவையைத் துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ப புதிய மின் உற்பத்தித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

மின் உற்பத்தி நிலையங்களை நவீனப்படுத்துதல்: ஏற்கெனவே உள்ள அனல் மின் நிலையங்களைப் பராமரித்து, தொழில்நுட்பக் குறைபாடுகளைக் களைந்து, அவற்றின் முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதல் மின் உற்பத்தி அலகுகளை நிறுவுதல்: தேவை அதிகரிக்கும் பகுதிகளில் புதிய உற்பத்தி அலகுகளை அமைத்து, நீண்டகால மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள்: எதிர்காலத் தேவையை முன்கூட்டியே கணித்து, வெளிப்படையான போட்டி ஏலங்கள் மூலம் நியாயமான விலையில் மின்சாரத்தைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும்.

மின் உற்பத்தியைக் கண்காணித்தல்: அனல் மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய மின் நிலையங்கள் மற்றும் மத்திய மின் ஒதுக்கீடு ஆகியவற்றின் உண்மையான உற்பத்தித் தரவுகளின் அடிப்படையில் திட்டமிட வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை விரிவுபடுத்துதல்: சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை ஊக்குவித்து, மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனைப் படிப்படியாக உயர்த்த வேண்டும்.

மின்சார சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல்: பகலில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தை பேட்டரி சேமிப்பு மற்றும் நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்கள் மூலம் சேமித்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மின் பரிமாற்றக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: புதிய உயர் மின்னழுத்தப் பாதைகள், துணை மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளை மேம்படுத்தி, உற்பத்தியாகும் மின்சாரம் தடையின்றி நுகர்வோரைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இப்போது வழித்தட மின் இழப்பு 12 சதவீதமாக உள்ளது. இது மிக மிக அதிகமான அளவு. மின் திருட்டு மற்றும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

வெளிச்சந்தை மின் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை: மின்சாரம் வாங்குவதற்கான ஏலங்கள், தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள், ஒப்பந்தக் காலம், கொள்முதல் விலை மற்றும் செலவுக் காரணங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும்.

பிற மாநிலங்களுடனான மின் பரிமாற்ற ஏற்பாடுகள்: மின் தேவை அதிகரிக்கும் காலங்களில் குறைந்த செலவில் மின்சாரத்தைப் பெறுவதற்காக, பிற மாநிலங்களுடனும் மின் உற்பத்தி நிறுவனங்களுடனும் முன்கூட்டியே ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

உச்சபட்ச மின் தேவைக்கான திட்டமிடல்: கோடைக் காலம், விவசாயப் பாசனக் காலம் மற்றும் தொழில் துறைகளின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் ஏற்படக்கூடிய மின் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து, மாற்று மின் ஆதாரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப மின் பயன்பாட்டை நிர்வகித்தல்: தொழிற்சாலைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் மின் சிக்கனத் திட்டங்களை ஊக்குவித்து, அதிக மின் தேவை ஏற்படும் நேரங்களில் பயன்பாட்டைச் சீரமைக்கும் நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

மின்சாரத் தேவை முன்னறிவிப்பு முறையை மேம்படுத்துதல்: வானிலை, விவசாயம், தொழில் துறை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகைப் பெருக்கம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர மின் தேவையைத் துல்லியமாகக் கணிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல்: அறிவிக்கப்படும் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை காலதாமதமின்றி நிறைவேறுவதற்கான கால அட்டவணையை வகுத்து, அவற்றின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மின் சிக்கனத்தையும் ஆற்றல் திறனையும் ஊக்குவித்தல்: குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் மின் சாதனங்கள், எல்.இ.டி. விளக்குகள், திறன்மிக்க மின் மோட்டார்கள் மற்றும் கட்டடங்களில் ஆற்றல் சிக்கன நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டும்.

ரூ. 35 உச்சபட்ச மின் கொள்முதல் நிறுத்தம்: அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்க ஒரு யூனிட் உச்சபட்சமாக ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது என்றும், கூடுதல் மின்சாரத்தை தேக்கி வைக்க பேட்டரி சேமிப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் தமிழக எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தினமணிக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி, "செப்டம்பர் மாதம் சராசரி தினசரி மின்தேவை 16,500 மெகாவாட்டாக இருந்த நிலையில், நிகழாண்டு நீடித்த கோடை வெப்பத்தால் 20,200 மெகாவாட்டாக அதிகரித்தது. சுமார் 3,000 மெகாவாட் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கவில்லை.

இதனால் உச்சநேரத் தேவைக்காக உடனடியாக மின் கொள்முதல் செய்யப்பட்டதால் யூனிட் ரூ.35 வரை விலை அதிகரித்தது. இந்த விலையில் இரு நாள்கள் மட்டும் 1,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மேற்கு வங்கம், ஆந்திரம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் எரிவாயு உற்பத்தியில் யூனிட் ரூ.33-க்கு இன்றும் கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. இதை தவிர்த்த மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களில் மின்தடை அதிகரித்துள்ளது. தமிழகம் வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி மூலம் மின் கொள்முதல் செய்துள்ளது.

தனியாரிடமிருந்து 4,000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற நீண்டகால ஒப்பந்தம் தற்போது கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் சொந்த உற்பத்தி தற்போது 5,300 மெகாவாட்டாக உள்ளது. உப்பூர் மற்றும் வடசென்னை, உடன்குடி விரிவாக்க மின் உற்பத்தித் திட்டங்களை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தி 3,000 மெகாவாட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

எந்த வகை மின்சாரம் என்ன விலை?

ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலைக்கு வாங்கப்படுகிறது? பொதுமக்களுக்கும் மற்றும் தொழிற்சாலைக்கும் எவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து சிஐடியூ சங்க தமிழ்நாடு மின் ஊழியர்களின் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். கண்ணன் கூறியதாவது:

அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 6.50-இல் இருந்து ரூ. 7.50 வரை வாங்கப்படுகிறது. காற்றாலையிலிருந்து மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 5.50 இருந்து ரூ.6.50 வரை வாங்கப்படுகிறது. சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3.50-க்கு வாங்கப்படுகிறது. நீர் மின் சக்தி மூலம் ஒரு யூனிட் 0.75 பைசாவுக்கு வாங்கப்படுகிறது. மத்திய தொகுப்பிலிருந்து ஒரு யூனிட் ரூ.6.50, எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 18 முதல் ரூ.20 வரைக்கும் வாங்கப்படுகிறது.

வீடுகளுக்கு மின் கட்டணம்

  • 0- 200 யூனிட் வரை............இலவசம்

  • 201-400 யூனிட் வரை.......ரூ.4.70

  • 401- 500 யூனிட் வரை.......ரூ. 6.30

  • 501- 600 யூனிட் வரை.......ரூ. 8.40

  • 601- 800 யூனிட் வரை.......ரூ. 9.45

  • 801-1000 யூனிட் வரை.......ரூ. 10.50

  • 1,000 யூனிட்டுக்கு மேல்.......ரூ.11.55

வணிக மின் கட்டணம்

  • 0- 100 யூனிட் வரை............ ரூ. 6.45

  • 101- 500 யூனிட் வரை............ ரூ.10.15

  • 500 யூனிட்டுக்கு மேல்............ ரூ.10.45

கட்டணத்துடன் நிரந்தர கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் 50 கிலோ வாட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ. 220 வாடகையும், 50 முதல் 112 கிலோ வாட் வரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.664 வாடகையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், மொத்த பயன்பாட்டு அளவை வைத்து 20 சதவீதம் பயன்படுத்துக் கட்டணமும் , 25 சதவீதம் கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம்

  • 0- 50 கிலோவாட் வரை யூனிட் ஒன்றுக்கு............ ரூ. 8

  • 50 -112 கிலோவாட் வரை............ ரூ. 8.25

  • 112 கிலோவாட்டுக்கு மேல்............ ரூ. 8.25

மேலும் 1 கிலோவாட்டுக்கு ரூ. 120 வாடகை வசூலிக்கப்படுகிறது. 50 கிலோவாட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.162-ம், 50 கிலோவாட் முதல் 112 கிலோவாட்வரை பயன்படுத்துபவர்களுக்கு 1 கிலோவாட்டுக்கு ரூ.330 வாடகையும், 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.608 வாடகையும் வசூலிக்கப்படும். அத்துடன் 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் சென்னை (1,830 மெகாவாட்), மேட்டூர் (1,440 மெகாவாட்), தூத்துக்குடி (1,050 மெகாவாட்) ஆகிய இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றின் மொத்த உற்பத்தித் திறன் தினமும் சுமார் 4,300 மெகாவாட் ஆகும். முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான தொழிலாளர் பலமும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தும், 50 சதவீதம்கூட மின்உற்பத்தி செய்யப்படுவதில்லை.

மின் வாரியம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு ஓர் அலகுக்கு ரூ.6.50 மட்டுமே செலவாகிறது. ஆனால், அதிகாரிகள் பிற செலவுகளையும் சேர்த்து ஓர் அலகுக்கு ரூ.7 முதல் ரூ.8 வரை கணக்குக் காட்டுகின்றனர். இத்தகைய சூழலில், தனியாரிடம் ஓர் அலகு மின்சாரம் ரூ.5-க்கு கிடைக்கும்போது, ரூ.8 செலவு செய்து நாம் ஏன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்? என்று காரணம் காட்டி, மாநிலத்துக்குள் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியை அதிகாரிகள் நிறுத்திவிடுகின்றனர்.

ஆனால் அதே அதிகாரிகள், மின்தேவை அதிகரித்துள்ளதாகக் கூறி, தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குகின்றனர். இந்தியா முழுவதும் வெப்பம் அதிகரித்துள்ளதால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, மின்சாரத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

இதுபோன்ற காலங்களில் மாநிலத்திலேயே முழுத் திறனுடன் மின்சார உற்பத்தியை மேற்கொண்டால், அரசால் பல கோடி ரூபாயைச் சேமிக்க முடியும். ஆனால், அதை அதிகாரிகள் செய்வதில்லை. தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதன் மூலம் அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை கிடைப்பதுதான் இதற்குக் காரணம்.

இதில் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு போகிறது எனத் தெரியாது. ஆனால், இதை மறுக்கவும் முடியாது. இந்த நிலை, கடந்த திமுக, அதிமுக ஆட்சிகளைத் தொடர்ந்து, புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் நீடிக்கிறது.

- நமது சிறப்பு நிருபர்கள் குழு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments