FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பயிர்க் கடன் தள்ளுபடி: தீர்வா? தொடர்கதையா?

விவசாயிக் கடன் சுமையைத் தற்காலிகமாகத் தணிக்கும் பயிர்க்கடன் தள்ளுபடியைப் பற்றி...

28 செப்டம்பர் 2026, 4:39 am IST
விவசாயம்.
பகிர்:

பயிர்க் கடன் என்பது குறிப்பிட்ட போகத்தில் பயிரிடப்படும் பயிருக்கும், சாகுபடி பரப்பளவுக்கும் ஏற்ப வழங்கப்படும் குறுகியகால விவசாயக் கடனாகும். இது ரொக்கத் தொகையாகவோ, விதை, உரம், பூச்சிகொல்லி போன்ற வேளாண் இடுபொருள்களாகவோ அல்லது இரண்டும் அடங்கியதாகவோ இருக்கலாம். கூட்டுறவு அமைப்புகளும் வங்கிகளும், ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தில் விவசாயத் தொழில் சார்ந்த கடன்களை வழங்குகின்றன.

விதை, உரம், பூச்சிகொல்லி, கூலி, உழவு, பாசனம் உள்ளிட்ட சாகுபடிச் செலவுகளுக்காக பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த டிராக்டர் போன்ற உபகரணங்களை வாங்கவும், விளைபொருள்களின் மதிப்புக் கூட்டுதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

பல்வேறு காரணங்களால் தவணை செலுத்த முடியாமல் விவசாயிகளுக்குக் கடன் சுமை ஏற்படுகிறது. வறட்சி, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களால் விளைச்சல் பாதிக்கப்படும்போது பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் செய்த செலவு திரும்பக் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. விளைந்த பொருள்களின் விலை வீழ்ச்சி, சாகுபடிச் செலவு அதிகரிப்பு, உரம், பூச்சிகொல்லி போன்ற இடுபொருள்கள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

அடுத்த போகப் பயிர் சாகுபடி மூலமே இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும் என்பதால் விவசாயிகள் கடன் வாங்கி மீண்டும் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டுமன்றித் தனிநபர்களிடமிருந்தும் விவசாயிகள் கடன் பெறுகிறார்கள். அடுத்தபோக சாகுபடியும் லாபகரமானதாக இல்லாவிட்டால் விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் சுமையில் சிக்குகிறார்கள்.

கடன் சுமையில் சிக்கிய விவசாயிகளுக்கு உதவும் வகையில், வட்டித்தொகை குறைப்பு, வட்டித் தள்ளுபடி, தவணைக் காலம் நீட்டிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. அதில் உச்சபட்ச நடவடிக்கைதான் கடன் தள்ளுபடி.

உலக நாடுகளில்...

உலகின் பல நாடுகள் முழுமையான கடன் தள்ளுபடி செய்வதில்லை. மாறாக, கடன் மறுசீரமைப்பு, உத்தரவாதம், தவணை ஒத்திவைப்பு, குறைந்த வட்டி போன்றவற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் விவசாயக் கடன் நெருக்கடியை அணுகும் விதம், இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடன் தள்ளுபடி அணுகுமுறையிலிருந்து மாறுபடுகிறது. கடனை தள்ளுபடி செய்வதைவிட, விவசாயி மீண்டும் கடன் பெறக்கூடிய தகுதி பெறுபவராகவும், சாகுபடியைத் தொடரக்கூடியவராகவும் இருப்பதற்கு உதவும் வகையிலான அணுகுமுறையையே அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடைப்பிடிக்கின்றன.

அமெரிக்காவில் வங்கிகளின் வாராக் கடன் ஆபத்தை அரசு பகிர்ந்துகொள்கிறது. வேளாண் சேவை முகமை என்கிற அமைப்பு, வணிக வங்கிகள் வழங்கும் விவசாயக் கடன்களுக்கு 95% வரை உத்தரவாதம் வழங்குகிறது. இதனால், வங்கிகளின் வாராக் கடன் ஆபத்து குறைக்கப்படுகிறது.

ஐரோப்பிய முறையில் விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது வேளாண் திட்டம் என்பது, விவசாயிகளின் வருமானத்துக்கு ஆதரவு, சிறு விவசாயிகளுக்குக் கூடுதல் ஆதரவு, பேரிடர் மேலாண்மை, நிவாரணம், பயிர்க் காப்பீடு மற்றும் முதலீட்டு உதவி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதாவது, விவசாயி கடனில் விழுந்த பிறகு உதவுவது மட்டும் அல்ல; அவர் கடனில் விழாத அளவுக்கு வருமானத்தை நிலைப்படுத்துவது என்பதையும் கருத்தில்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், பயிர்க் கடன் தள்ளுபடியை, விவசாயிகளை வாக்குவங்கியாக மாற்றும் ஒரு தேர்தல் உத்தியாகவே அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.

கடன் தள்ளுபடி என்பது உண்மையில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்குமா என்றால், இல்லை என்பதே அதற்கு நேரடி பதிலாக அமையும். விவசாயக் கடன் தள்ளுபடி, கடன் சுமையில் சிக்கியுள்ள விவசாயிக்கு உடனடி நிவாரணம் தரலாம்; ஆனால் விவசாயிகளின் கடன் பிரச்னை மீண்டும் உருவாகாமல் தடுக்கும் நிரந்தரத் தீர்வு அல்ல.தள்ளுபடி செய்த பிறகும், விவசாய வருமானத்துக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை, காப்பீட்டுப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மீண்டும் கடன் தேவை ஏற்படக்கூடிய சூழல் உருவாகும்.

ஏற்கெனவே பேரிடர் அல்லது கடுமையான வருமான இழப்பால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள விவசாயிக்கு, கடன் நிவாரணம் முக்கியமான சமூகப் பாதுகாப்புக் கருவியாக இருக்கலாம். ஆனால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறிப்பாக, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் கடன் தள்ளுபடியை அறிவிப்பது பல்வேறு பிரச்னைகளுக்கு வித்திடுகிறது.

அரசுக்கு பெரும் அளவில் உடனடி நிதிச்சுமை ஏற்படும். தள்ளுபடிக்கான நிதியைப் பாசனம், காப்பீடு, விலை ஆதரவு, சந்தை/சேமிப்புக் கட்டமைப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். அடிக்கடி தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், நிதிப் பற்றாக்குறை மற்றும் பிற துறைகளுக்கான செலவுத் திறனில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும்.

அரசு தள்ளுபடி தொகையை உரிய காலத்தில் முழுமையாக ஈடு செய்தால், உடனடி வங்கி பாதிப்பை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால், அரசு இழப்பீட்டைத் தாமதமாக வழங்கினால், கடன் வழங்கும் நிறுவனங்களின் பணப்புழக்கம், கடன் வழங்கும் திறனில் பாதிப்பு ஏற்படும். அவற்றின் நிதி மற்றும் மூலதன மேலாண்மையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்திலும் தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவானால், கடனைத் திருப்பிச் செலுத்தும் ஊக்கம் விவசாயிகளிடையே குறையக்கூடும். அதேசமயத்தில், கடனை முறையாகச் செலுத்தியவர்களுக்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலாது.

இரு கோணங்கள்

கடன் தள்ளுபடி மட்டுமே நீண்டகால விவசாயக் கொள்கையாக இருந்தால், கடன் உருவாகும் அடிப்படை காரணங்கள் மாறாது. கடனைத் தள்ளுபடி செய்வது, கடன் உருவாகும் காரணத்தை ஒழிப்பது என்ற இரு கோணங்களில் இதைப் பார்க்க வேண்டும். ஒருமுறை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஏன் கடன் சுமை ஏற்படுகிறது?விவசாயிகள் ஏன் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலைக்கு செல்கிறார்கள்? விவசாயிகளின் தேவை கடனை தள்ளுபடி செய்வதா? அல்லது கடன் வாங்கத் தேவையில்லாத அளவுக்கு வருமானமா? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்துவதிலும், விளைபொருள்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதிலும், சந்தையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை அகற்றுவதிலும் தகுந்த கவனம் செலுத்தினால் விவசாயிகளின் கடன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். அதேபோன்று, சிறு, குறு விவசாயிகளுக்கும், பெரிய விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான கடன் தள்ளுபடி என்பதும் சரியான அணுகுமுறையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. நில அளவு மட்டும் அடிப்படையாக இல்லாமல், கடன் சுமை, வருமானம், இழப்பு, திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் தள்ளுபடியை வரையறை செய்யவேண்டும்.

அதே நேரத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள், பட்டா இல்லாத உண்மையான சாகுபடியாளர்கள், வாய்மொழிக் குத்தகையாளர்கள் ஆகியோரது நிலை என்ன என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதாவது, விவசாயக் கடன் என்பது, நிலம் வைத்திருப்பவருக்கா?அல்லது, உண்மையில் சாகுபடி செய்பவருக்கா? எனத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

இவற்றைக் கருத்தில்கொண்டு, பயிரிடப்படும் நில அளவு, விவசாய வருமானம், மொத்தக் கடன், பயிர் இழப்பு விகிதம், விலை வீழ்ச்சி, காப்பீட்டு நிலை, மாற்று வருமானம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் விவசாயக் கடன்கள் தொடர்பான கொள்கைகளை வகுக்கலாம். அதாவது, விவசாயி, வங்கி/கூட்டுறவு நிறுவனம், அரசு, சந்தை ஆகிய நான்கையும் இணைக்கும் ஒருங்கிணைந்த நீண்டகால வேளாண் நிதி மாதிரி ஒன்றை உருவாக்க வேண்டும்.

இயற்கைப் பேரிடரின்போது...

விவசாயி சாகுபடி செய்வதற்காகக் குறைந்த வட்டியில் வங்கிகள்/கூட்டுறவு நிறுவனங்கள் கடன் கொடுக்க வேண்டும். அந்தக் கடன் தொகையை முதலீடாகக் கொண்டு, விவசாயியால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள்களுக்கு, உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்கள் போன்ற எதிர்பாராத காரணங்களால் விவசாயிக்கு இழப்பு ஏற்பட்டால், விவசாயிக்கும் கடன் கொடுத்த வங்கிக்கும் பெரும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் விவசாயி தனது விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கப் பெற்று, கடனை முறையாகத் திருப்பிச் செலுத்த முடியும். வங்கிகளும் போதிய நிதி ஆதாரங்களுடன் அடுத்த பருவக் கடன் வழங்கத் தயாராக இருக்க முடியும்.

இந்தச் சுழற்சியின் எந்த இடத்தில் தடங்கல் ஏற்பட்டாலும் அரசு தலையிடும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.

கடன் தள்ளுபடி இல்லாத விவசாயம் என்பது இலக்கு அல்ல; மாறாக, தள்ளுபடி தேவைப்படாத அளவுக்கு விவசாயியின் வருமானத்தையும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு, இந்த நீண்டகால வேளாண் நிதி மாதிரி உருவாக்கப்பட வேண்டும்.

- நமது சிறப்பு நிருபர்கள் குழு

அரசின் நிதிநிலையில் தாக்கம் என்ன?

கூட்டுறவு வங்கிகள் மூலமாக குறு, சிறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்பது தமிழகத்துக்கு புதியது அல்ல. 1990-ஆம் ஆண்டுகளிலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் ரூ. 6,500 கோடியும், 2021-இல் ரூ.12,110 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த விதத்தில் இந்த முறை ரூ. 2,021 கோடி தள்ளுபடி என்பது குறைந்த அளவுதான்.

மேலும் 2026- 27 வரவு- செலவு கணக்கின்படி தமிழ்நாட்டின் மொத்த செலவுத் தொகை ரூ.5,24,556 கோடி. அதில் கடனை திருப்பிச் செலுத்தும் தொகை மட்டும் ரூ.51,971 கோடி ஆகும். 2026 வரவு- செலவு கணக்கின்படி தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.10.5 லட்சம் கோடியாக இருக்கும். அதோடு இந்தக் கடன் தள்ளுபடி தொகையுடன் சேர்த்து மொத்த தொகையை மேலும் அதிகரிக்கும். ஆனாலும், மொத்தச் செலவில் விவசாயக் கடன் தள்ளுபடி ஒன்றரை சதவீதத்துக்கு குறைவு (1.13%).

குறு, சிறு விவசாய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தக் கூட்டுறவு கடன் தள்ளுபடி, தமிழக அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்றாலும், மொத்தக் கடன் தொகையை சற்று அதிகரிக்க வேண்டும். மக்களுக்கு உணவு அளிக்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், கடுமையான வியாபார சூழலில் சிக்கி உள்ளவர்களுக்கும் கடன் கொடுக்க வேண்டும்.

சோம.வள்ளியப்பன் (பொருளாதார நிபுணர்).

விவசாயக் கடனை மறுக்க முடியாது

ஒரு விவசாயி ஏற்கெனவே கடன் பெற்று அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், அவர் மீண்டும் ஒரு புதிய கடனுக்காக விண்ணப்பித்தால் அதை எந்த வங்கியும் மறுக்க முடியாது.

வங்கிகளுக்கு வழங்கியுள்ள சுற்றறிக்கையில் விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும் என மிகவும் தெளிவாகக் கூறியுள்ளது. அதனால், விவசாயக் கடனை மறுக்க முடியாது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மொத்தக் கடனில் 18 சதவீதம் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் கொடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் சேவைத் துறைகளுக்கு அடுத்து விவசாயிகளுடைய பங்களிப்பு அதிகம். நாட்டின் பொருளாதாரம் ஜிடிபி வைத்து கணக்கிடப்படுகிறது.

ஜிடிபி கணக்கீட்டில் விவசாயிகளுடைய பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதனால், விவசாயிகளுக்கு கடன் வழங்குவது வங்கிகளுக்கு சுமையாக இருக்காது. அதற்கு மாறாக நாட்டின் பொருளாதாரம் முன்னேறும்.

ஷியாம் சுந்தர் தவே, (சென்ட்ரல் வங்கி அதிகாரி)

இழப்பீடு எவ்வாறு வழங்க வேண்டும்?

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது பயிர் விளைவிப்பதற்கான ஒட்டுமொத்த உற்பத்திச் செலவைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தினால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இந்த நடைமுறையை விவசாய பயிர் சேதத்துக்கான இழப்பீடு வழங்குவதிலும் பின்பற்ற வேண்டும்.

சில வேளாண் சேதங்களுக்கு ஆயுள்கால உற்பத்தியை கணக்கில்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும். உதாரணமாக ஒரு தென்னை மரம் பாதிக்கப்பட்டால், அதன் உற்பத்திக் காலம் சுமார் 25 ஆண்டுகள் என்பதைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப இழப்பீடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இயற்கைச் சீற்றங்களால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படும்போது, பழைய அரசாணைகளின்படியே இழப்பீடு கணக்கிடப்படுகிறது. அதில் மாற்றம் கொண்டுவருவது அவசியமாகும். இழப்பீடு கணக்கெடுப்பை பொருத்தவரையில் பெரிய அளவில் அரசியல் அழுத்தங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

பி.பெரும்படையார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர்.

விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்தால் போதும்

இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் விவசாயம் செய்யவே பெரும்பாடு பட வேண்டிய நிலை உள்ளது. வேலை செய்ய ஆள்கள் பற்றாக்குறை, இயந்திரயமாகிவிட்ட விவசாயப் பணிகள், உரம் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு போன்றவை காரணமாக விவசாயம் செய்யும் விவசாயிகள் பலவித சிக்கல்களை அனுபவிக்கின்றனர். இதைத் தவிர மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் எங்களுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி என்பது தேவையில்லை. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்தாலே போதும். குறிப்பாக விவசாயிகளின் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி, அதை அமல்படுத்தினாலே போதும்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகளும் எந்தவித கடன் தள்ளுபடிகளையும் நம்பாமல் முழுமையான விவசாயம் செய்து வருவாயை ஈட்ட முடியும். அதை நோக்கி அரசு பயணித்தால்தான் எதிர்காலத்தில் விவசாயம் நிலைக்கும்.

ஆர்.டி.முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலர்.

வங்கிகளில் கடன் பெறுவதில் என்ன சிக்கல்?

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் 5 ஏக்கர் வரை சிறு, குறு விவசாயிகளுக்கு எவ்வித பிணையுமின்றி ரூ.2 லட்சம் வரை பயிர்க் கடன் வழங்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், கூட்டுறவு சங்கங்கள் 1 அல்லது 2 ஏக்கர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை மட்டுமே கடன் வழங்குகின்றன. மேலும், புதிய விவசாயிகளுக்கு

கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவது இல்லை. ஆண்டுதோறும் 25 சதவீதம் புதிய விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்று விதிகளில் உள்ளது. இந்த விதி பின்பற்றப்படுவது இல்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் கடன் வட்டி சலுகை 8 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

தவணை தவறும்பட்சத்தில், கடன் காலம் முழுவதற்கும் அபராத வட்டி விதிக்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் 16 முதல் 20 சதவீத விவசாயிகளின் கடன் தேவையை மட்டுமே பூர்த்தி செய்து வருவதால், சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் சாகுபடி அளவுக்கு ஏற்ப கடன்களைப் பெற முடிவதில்லை.

இதனால் சிறு, குறு விவசாயிகள் உரிய நேரத்தில் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்தால் மட்டுமே, சிறு, குறு விவசாயிகள் உரிய நேரத்தில் தடையின்றி தேவைகளின் அடிப்படையில் எளிதாக கடன் பெற இயலும்.

ப. கமல்ராம், விவசாயி தலைஞாயிறு (நாகப்பட்டினம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments