FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆக்கபூர்வ இளைஞர் சக்தி!

இந்தியா, விளையாட்டுத் துறையில் பின்தங்கி இருந்த நிலையை மாற்றி படிப்படியாக முன்னேறி வருவதைப் பற்றி...

2 நவம்பர் 2026, 3:57 am
பகிர்:

ஜப்பானில் நடைபெற்று முடிந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 114 பதக்கங்களுடன் இந்தச் சாதனையை இந்தியா செய்திருக்கிறது. உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தியா, விளையாட்டுத் துறையில் பின்தங்கி இருந்த நிலையை மாற்றி படிப்படியாக முன்னேறி வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

இதுபோன்ற சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் கிராமங்களிலிருந்து சென்று பதக்கங்களை வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளின் சாதனைகள் போற்றத்தக்கது. அவர்களில் பலர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், விளையாட்டுக்கு என உயர்ந்த பயிற்சி வசதிகள் இல்லாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், சாதிக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியம்தான் அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

வில்வித்தையில் இரண்டு தங்கங்களை வென்ற 18 வயது ஷீத்தல் தேவி இந்தியாவின் தங்க மங்கையாகக் கொண்டாடப்படுகிறார். பொதுவாக ஒரு கையால் பிடிக்கப்பட்டு, மறு கையால் இழுத்து எய்வதுதான் வில். ஆனால், இரண்டு கரங்களும் இல்லாத ஷீத்தல் தேவி, வில்வித்தையில் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார் என்றால், அது எப்பேர்ப்பட்ட சாதனை. அந்தச் சாதனைக்குப் பின்னால் இருக்கும் ஷீத்தல் தேவியின் உழைப்பும் வலியும் அசாதாரணமானவை. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பிறந்த ஷீத்தல் தேவி, 'போகோமெலியா' எனும் உடல் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாத குறைபாடு உடையவர்.

Advertisement

Advertisement

உடல் ரீதியான இந்த சவால், விளையாட்டுத் துறையில் சாதிப்பதிலிருந்து ஷீத்தல் தேவியை தடுக்கவில்லை. 2021-ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்த உள்ளூர் நிகழ்வில், அவரது வில்வித்தைத் திறன் பலரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னாள் வில்வித்தை வீரரும் பயிற்சியாளருமான குல்தீப் வேத்வானின் வழிகாட்டுதலில் ஷீத்தல் தனது திறன்களை வளர்த்துக் கொண்டார்.

ஷீத்தல் தேவி தனது காலால் வில்லை நிலைப்படுத்தி, தோளைப் பயன்படுத்தி நாணை இழுத்து, வாயின் உதவியால் அம்பை எய்கிறார். இந்தக் கூட்டுத் திறனை மிகச்சரியாகப் பயன்படுத்த கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். 2023-இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது சாதனைப் பயணம் தொடர்கிறது.

ஆசிய பாரா போட்டியில் 100 மீ., 400 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற திலீப் காவிட், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த திலீப், தனது ஐந்து வயதில் ஒரு மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் வலது கையில் காயம் ஏற்பட்டு, பின்னர் அந்தக் கையையே நீக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் சற்றும் தளராத திலீப், கிராமத்தின் தூசு படிந்த சாலைகளில் ஓட்டப் பயிற்சி பெற்று வந்தார். அவரை கவனித்த பயிற்சியாளர் வைஜநாத், தொழில்முறை பாரா தடகளப் போட்டிகளை நோக்கி திலீப்பை வழிநடத்தினார்.

உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் இரண்டிலும் தங்கம் வென்ற நிஷாத் குமாரின் கதை, விளையாட்டு வீரர்கள் மட்டுமன்றி அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகும். ஹிமாசல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் பிறந்த நிஷாத் குமார், தனது குழந்தைப் பருவத்தில் புல் அறுக்கும் இயந்திரம் தொடர்பான விபத்தில் தனது வலது கையை இழந்தார். இருப்பினும் விளையாட்டு மீதான ஆர்வத்தால், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி, 2022 ஆசிய பாரா போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம், 2024 பாரீஸ் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி என அவரின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. துப்பாக்கி சுடுதலில் 10 மீ., 50 மீ. என இரு பிரிவுகளில் தங்கம் வென்ற 38 வயது மோனா அகர்வால், இரு குழந்தைகளின் தாய்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்தன. அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள். ஓர் ஆண் வாரிசு வேண்டும் என தீவிரமாக விரும்பிய குடும்பத்தில் பிறந்த அவர், கடும் அவப்பெயரையும், உறவினர்களின் ஏளனப் பேச்சையும் எதிர்கொண்டு வளர்ந்தார்.

பவர் லிஃப்டிங், வாலிபால் என பல விளையாட்டுகளை முயற்சி செய்த மோனா, இறுதியாக துப்பாக்கி சுடுதலை தனது 34-ஆவது வயதில் தேர்வு செய்து இப்போது சாதனை படைத்திருக்கிறார். பாட்மின்டனில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தின் துளசிமதி முருகேசன், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இடது கையில் பிறவியிலேயே இருந்த குறைபாட்டால் கட்டை விரலை இழந்திருந்ததோடு, நாள்பட்ட நரம்பு பாதிப்பு மற்றும் தசைச் சிதைவு போன்ற சவால்களை எதிர்கொண்டிருந்தார்.

அந்த உடல் சவால்கள் துளசிமதியை முடக்கிவிடவில்லை. தந்தை முருகேசனின் ஆதரவாலும், பயிற்சியாலும் இப்போது சாதனை நாயகியாக வலம் வருகிறார். இந்தியாவின் இளைஞர் சக்தி நாட்டின் மிகப்பெரிய பலம். விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.

அதிலும், மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது சவால்களை எவ்வாறு எதிர்கொண்டு சர்வதேச போட்டிகளில் சாதனை படைக்கின்றனர் என்பதை உற்று கவனித்தால், அதில் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற தீராத ஆர்வமும், இலக்கும் இருக்கும். அத்தகைய வீரர்கள் இந்தியாவின் இளைஞர் சக்திக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவர்களாகத் திகழ்கின்றனர்.

*********

திருக்குறள் (எண் 625) அதிகாரம்: இடுக்கண் அழியாமை

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.

விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments