FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பக்கவிளைவு ஆபத்து!

தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான தேர்வர்களுக்கு வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

50 வினாடிகள் முன்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பகிர்:

தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான தேர்வர்களுக்கு வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் தொடர்ந்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படாததால், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த அக்டோபர் 30 முதல் அமலுக்கு வந்துள்ள இந்தச் சலுகை அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

Advertisement

Advertisement

இதனால், வயது வரம்பு முடிவடையும் நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் பயன் பெறுவர் என்பதை மறுக்க முடியாது. வயது உச்ச வரம்பை உயர்த்தியுள்ளது இது முதல்முறையல்ல. முந்தைய திமுக ஆட்சிக் காலங்களிலும் வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. அதற்கு சில வலுவான காரணங்கள் இருந்தன.

கடந்த 2001-இல் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, அதற்கு முந்தைய திமுக அரசின் கொள்கை மற்றும் செயல்பாடுகளால் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், சிக்கன நடவடிக்கையாக ஆசிரியர், மருத்துவர் மற்றும் காவல் துறை தவிர இதர துறைகளுக்கு புதிதாக ஆள்கள் நியமனத்துக்கு தடை விதித்தார். எனினும், தனது ஆட்சியின் கடைசிக் காலத்தில் அந்தத் தடையை நீக்கி அறிவித்தார். வயது உச்ச வரம்பு சலுகையையும் அறிவித்தார். அதை அவரால் நிறைவேற்ற இயலவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

2006-இல் ஆட்சிக்கு வந்த திமுக முதல்வர் கருணாநிதி, அந்தத் தடையை நீக்கினார். வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி அதே ஆண்டு ஜூலை, செப்டம்பரில் முறையான அரசாணைகளை வெளியிட்டார். அதற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. முந்தைய 5 ஆண்டுகளில் அரசு வேலைவாய்ப்பை பெற முடியாத இளைஞர்களுக்கு அது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

அதன் பிறகு, கடந்த 2019}இல் ஏற்பட்ட கொவைட்}19 பெருந்தொற்று பரவலால் அரசு வேலைக்கான ஆள் சேர்ப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. எனவே, 2021 செப்டம்பரில்

அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்வர்களுக்கு வயது உச்ச வரம்பை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிட்டார்.

இப்போது முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இந்த 5 வயது உச்ச வரம்பு சலுகை அறிவிப்பு குரூப்-1, குரூப்-2, 2-ஏ, குரூப்-4 உள்பட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பொருந்தும்.

அத்துடன், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி மற்றும் டிஎன்சி, எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்டி, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கெனவே உள்ள வயது சலுகைகளுடன் இது கூடுதல் சலுகையாக அமையும்.

வயது உச்ச வரம்பு சலுகையால், கடந்த காலங்களில் தேர்வைத் தவறவிட்டவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு அறிவிப்பு வராதது, பொருளாதார வசதி இல்லாத பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பயிற்சிக்கு பணச் செலவு செய்ய இயலாதவர்கள் போன்றோர் பயன் பெறலாம்.

தேர்வு மற்றும் போட்டி கடுமையாக உள்ள குரூப்-1, 2 போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி பெற கூடுதல் கால அவகாசமும் கிடைக்கும். அரசுக்கு, திறமையானவர்களை அரசுப் பணியில் சேர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும் என கூறலாம்.

அதேவேளையில், வயதில் மூத்த, பல போட்டித் தேர்வுகளை எழுதி அனுபவம் வாய்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் போட்டியில் பங்கேற்பதால் போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும் சூழலும் ஏற்படும்.

இதனால், அரசுத் துறைகளில் இளைஞர்களைவிட வயதானவர்கள் வேலைவாய்ப்பை பெறும் நிலை ஏற்படும் என்பதுடன் ஓய்வு வயது 60 என்பதால் அவர்கள் சேவை குறுகிய காலமே இருக்கும்.

குரூப்-1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 32-இல் இருந்து 37-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-இல் இருந்து 42-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் பிரிவின் வயது வரம்பு 42-இல் இருந்து 47-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47-இல் இருந்து 52-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப்-1 பதவி என்பது துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புமிக்க கண்காணிப்பு நிலையில் உள்ள பதவிகள் ஆகும்.

நவீனமயமாகி வரும் அரசு நிர்வாகத்தில் எண்ம சேவை, செயற்கை நுண்ணறிவு என நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் பெருகி வருகின்றன. அதற்கு, அவற்றை விரைவாக உள்வாங்கி அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு செயல்படுத்தும் ஆற்றல்மிக்க இளமையும், துடிப்பும் நிறைந்த இளைஞர்கள் அவசியம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

அரசுத் துறைகளில் ஆண்டுதோறும் உருவாகும் காலிப் பணியிடங்களை தவறாது கணக்கெடுத்து அவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அட்டவணையை ஆண்டுதோறும் முன்கூட்டியே அறிவித்து குளறுபடிகள் இல்லாமல் தேர்வை நடத்தி ஆள்களை நியமித்தால் வயது உச்சவரம்பு சலுகை அளிக்க வேண்டிய தேவையே இருக்காது. அதை விடுத்து, உணர்ச்சி வேகத்தில் குறுகிய கால அரசியல் நோக்கத்துக்காக செய்யப்படும் எந்தச் செயலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

திருக்குறள் (எண் 511) அதிகாரம்: தெரிந்து வினையாடல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.