முகப்பு

தீர்வல்ல, தீர்வுக்கான நகர்வு!

நீண்ட தாமதத்துக்கும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானதற்கும் பிறகுதான் நாம் மிகவும் ஆபத்தான களைக்கொல்லிகள் குறித்து விழித்துக் கொண்டிருக்கிறோம்.

27 நவம்பர் 2026, 4:52 am
தீர்வல்ல, தீர்வுக்கான நகர்வு!
பாராகுவாட் டைகுளோரைடு
பகிர்:

நீண்ட தாமதத்துக்கும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானதற்கும் பிறகுதான் நாம் மிகவும் ஆபத்தான களைக்கொல்லிகள் குறித்து விழித்துக் கொண்டிருக்கிறோம்.

வேளாண் பணிகளில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகள் குறித்து மத்திய அரசு முக்கியமான சில கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, விவசாயிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான பாராக்வாட் டைக்ளோரைட் என்கிற களைக்கொல்லிக்கு அரசு தடை விதித்திருக்கிறது.

தாமதமாக எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், பாராட்டுக்குரிய முடிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

மிகவும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவது வேளாண்மையைக் கடந்து வேறு பல காரணங்களுக்காகவும் வரவேற்கப்பட வேண்டும்.

வேளாண் பொருள்கள்மூலமான பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் உடனடியானது என்றால், அவை ஏற்படுத்தும் ஏனைய பாதிப்புகள் ஏராளம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம், தற்கொலை முயற்சித் தடுப்பு என்று ஆபத்தான பூச்சிக்கொல்லிகளின் மீதான கட்டுப்பாடு நீளும்.

அதிக ஆபத்தான களைக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது படிப்படியாக பயன்பாட்டில் இருந்து அகற்றுவது தற்கொலை முயற்சிகளைக் குறைக்கிறது அல்லது தடுக்கிறது என்கிற வாதத்துக்குப் பல ஆய்வுகள் வலுசேர்க்கின்றன.

70-க்கும் மேற்பட்ட நாடுகள் பாராக்வாட்களுக்குத் தடை விதித்திருக்கின்றன; சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருக்கின்றன; இப்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால், 'பாராக்வாட்' சார்ந்த களைக்கொல்லிகளால் நிகழ்ந்திருக்கும் மரணங்கள் - தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம்.

பாராக்வாட் டைக்ளோரைட் சிறிய அளவில் கலந்திருந்தாலே, மரணம் ஏற்படுத்தக் கூடியது. அதற்கு மாற்று மருந்து இல்லை என்பது அதைவிட சோகம்.

அது மட்டுமல்ல, இந்த ரசாயன துகளை சுவாசிப்பதன்மூலம் ஏற்படும் தாக்கம் நரம்பு மண்டலம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளம்.

வேளாண்மை சார்ந்த சமூகங்களில், பயிர்களுக்குத் தேவையான பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், நச்சுத்தன்மையுடனான உரங்கள் உள்ளிட்டவை விவசாயிகளின் வீடுகளில் பாதுகாக்கப்படுவது வழக்கம்.

அப்போதுதான் தேவைக்கேற்ப அவற்றை எடுத்துப் பயன்படுத்த முடியும். அவற்றின் நச்சுத் தன்மை காற்றின்மூலம் பரவுவதால், சுவாசிப்பதன்மூலம் விவசாயிகளின் குடும்பத்தினர் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி, சரக்குக் கையாளுதல், விற்பனை, விவசாய நிலங்களில் தெளிப்பது உள்ளிட்ட எல்லா செயல்பாடுகளின்போதும் தற்செயலாக நச்சு பாதிப்பு ஏற்படுகிறது.

விவசாயிகளின் வீடுகளில் பாதுகாக்கும்போதும், வயலுக்கு எடுத்துச் செல்லும்போதும்கூடப் பல நிகழ்வுகளில் தவறுதலாக நச்சு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு ஆலைகளில் பணிபுரிவோர், அவற்றை சந்தைப்படுத்துவோர், சில்லறை விற்பனை நிலையங்களில் பணிபுரிவோர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர்கள், குழந்தைகள் உள்பட அதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம்.

2024-இல் தற்செயலாகவும், எதிர்பாராமலும் ஏற்பட்ட அல்லது பதிவான விபத்து மரணங்களின் எண்ணிக்கை 4,67,857; அவற்றில் தவறுதலாக விஷ பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 21,721;

பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது ஓர் ஆய்வு.

தெரிந்தே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பவர்கள்தான் பெரும்பாலானோர். அவர்களில் 63% பாதிப்பாளர்கள் ரசாயன பூச்சிக்கொல்லிகளைத்தான் நாடுகிறார்கள். அதுதான் பிறருக்குச் சந்தேகம் ஏற்படாமல் உடனடியாக வாங்கக் கூடியது.

கடந்த 21 ஆண்டுகளில் பூச்சிக்கொல்லி அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,89,992. அவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலானோர் மகளிர் என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

அதிக ஆபத்தான பூச்சிக்கொல்லிகளின் தயாரிப்பு, விற்பனை உள்ளிட்டவற்றுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதும், அவற்றின் விற்பனைகளைக் கண்காணிப்பதும், தற்கொலை முயற்சிகளைப் பெருமளவு குறைக்க உதவும். பூச்சிக்கொல்லிகளின் மீதான கட்டுப்பாடுகளால் மட்டுமே தற்கொலைகளை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது என்றாலும், அதற்கான பாதிப்பைக் குறைக்க முடியும்.

வங்கதேசம், தென் கொரியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அதிக ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்கொலைகள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதும்கூட, மத்திய அரசின் புதிய அறிவிப்புக்குக் காரணம் என்று கருதலாம்.

பாராக்வாட் டைக்ளோரைட் உள்ளிட்ட சில களைக்கொல்லிகளுக்குக் கட்டுப்பாடு விதித்ததுபோலவே, பயிர்களின் பாதுகாப்புக்கு மாற்றுத் தொழில்நுட்பம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

அதிக ஆபத்தான களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் இணையவழியில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்காவிட்டால், அரசின் அறிவிப்புகளும், கண்காணிப்பும், கட்டுப்பாடும், தடையும் அர்த்தமற்றவை என்பதையும் வலியுறுத்தத் தோன்றுகிறது.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

திருக்குறள் (எண் 428) அதிகாரம்: அறிவு உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.