FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கண்களை விற்று...

வளர்ச்சி என்ற பெயரில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, அவற்றின் எதிர்வினையாக சூழலியல் பாதிக்கப்பட்டு பல்லுயிர் பெருக்கம் தடைபடுகிறது.

28 அக்டோபர் 2026, 1:45 am
- பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவின் வனங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, அவற்றின் எதிர்வினையாக சூழலியல் பாதிக்கப்பட்டு பல்லுயிர் பெருக்கம் தடைபடுகிறது. இன்னொருபுறம் வாழ்வாதார சமநிலை பாதிக்கப்படுவதால், ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகள் பேரழிவை நோக்கி நம்மைத் தள்ளுகின்றன.

காடுகள் அழிப்பும், அதனால் ஏற்படும் பல்லுயிர் இழப்பும் மனிதர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடியவை. இந்தியாவின் காடுகள் வளர்ச்சிப் பணிகளாலும், தோட்டப்பயிர்கள் காரணமாகவும், காட்டுத் தீ, ஆக்கிரமிப்புகள் மூலமாகவும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. அதனால், காடுகளின் சூழலியல் பங்களிப்பு குறைந்து வருகிறது. வனப் பகுதிகள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படும்போது, சூழலியல் சமநிலை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

மகாராஷ்டிரம் பல்கார் மாவட்டத்தில் அமைக்கப்படும் கர்காய் அணை திட்டம்; அருணாசல பிரதேசத்தின் திபாங் புனல் மின்நிலையத் திட்டம்; கிரேட் நிக்கோபார் தீவுகளின் பாதுகாப்புக்கான வளர்ச்சித் திட்டம் உள்ளிட்டவை சூழலியல்வாதிகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. அவை அடர்ந்த வனப்பகுதிகளால் வழங்கப்படும் சூழலியல் பங்களிப்புகளைப் பாதிக்கும் என்பது அவர்களது வாதம். இது குறித்து சர்வதேச அளவிலும் விவாதங்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இயற்கைப் பாதுகாப்புக்கான ஐயூசிஎன் எனப்படும் 'இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர்' வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைப் பட்டியலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிரினங்களும், தாவர இனங்களும் இடம்பெறுகின்றன. அவற்றின் அழிவு மனிதர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும், பொருளாதாரத்துக்கும், உணவு மற்றும் குடிநீர் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது அந்த அமைப்பு. பல்வேறு அறிக்கைகளும் ஆய்வுகளும் இயற்கையாக வளர்ந்திருக்கும் லட்சக்கணக்கான மரங்களை வெட்டுவது குறித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கின்றன.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற வனத் துறை அதிகாரி உமாசங்கர் சிங் என்பவர் இந்தியக் காடுகள் குறித்து பல்வேறு நிறுவனங்களும் நிபுணர்களும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் சேகரித்து ஆய்வு நடத்தி இருக்கிறார். அதைப் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார். 'அழிவின் விளிம்பில் இந்தியக் காடுகள்' என்கிற அந்தப் புத்தகம் உலகின் பல்லுயிர் பெருக்க நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம் அதிவேகமாகக் குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, இந்தியாவின் முக்கியமான நான்கு பல்லுயிர் பெருக்க மையங்களின் சூழலியல் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. மத்தியப் பிரதேசத்தின் கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டம்; சத்தீஸ்கரின் சிங்கிரெüலி, ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத் திட்டங்கள்; தலைசேரி-மைசூரு ரயில் இணைப்புத் திட்டம்; ஹுன்சூரு-மங்களூரு ரயில் இணைப்புத் திட்டம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. முக்கியமாக, கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வனப் பகுதிகளின் முக்கியமான பல பங்களிப்புகளைப் பாதிக்கும் என்று அந்தப் புத்தகத்தில் உமாசங்கர் சிங் குறிப்பிடுகிறார்.

அவரது ஆய்வு 2020-க்கும் 2025-க்கும் இடையில் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அனுமதிகளை ஆராய்கிறது. அதன்படி பொதுமக்களும், சூழலியல்வாதிகளும் 329 திட்டங்களில் வனப்பகுதி அழிப்புக்குத் தடை விதிக்கக் கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தனர். அவற்றில் 65-க்கு மட்டுமே (வெறும் 20%) தீர்ப்பாயம் அனுமதிக்குத் தடை விதித்திருக்கிறது. இன்னொருபுறம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்த 160 திட்டங்களில் 126 திட்டங்களுக்கு (சுமார் 79%) நீதிமன்றங்கள் ஒப்புதல் வழங்கி அனுமதியளித்திருக்கின்றன. அதாவது வனப் பாதுகாப்பைவிட, வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்ப்புகள் வழங்கி இருக்கின்றன.

வனப் பகுதிகள் அழிக்கப்படுவது ஆபத்தான தொற்றுநோய்களுக்கு வரவேற்பளிப்பதாக அமையும் என்பதை கடந்த சில ஆண்டுகளின் அனுபவங்கள் உணர்த்துகின்றன. ஜூனோட்டிக் நோய்கள் எனப்படும் நோய்த் தொற்றுகள் வனவிலங்குகளிலிருந்து உருவாகின்றன. வனங்கள் அழிக்கப்படும்போது, வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளில் நுழைவதற்கும், வாழ்வாதாரம் தேடுவதற்கும் கட்டாயப்படுத்தப்படுகின்றன. வனவிலங்குகளிலிருந்து உருவாகி உயிரினங்களையும் மனிதர்களையும் பாதிக்கும் தொற்றுகள்தான் இன்ஃபுளுயன்ஸô எனப்படும் ஃப்ளு, நிஃபா, ரேபீஸ் எனப்படும் வெறிநாய் விஷம், பிளேக், கொவைட் 19, ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட தீநுண்மிகள்.

2019, 20, 21-இல் ஒட்டுமொத்த உலகத்திலும் பேரழிவை ஏற்படுத்தி, இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து லட்சம் உயிர்களைப் பலி வாங்கிய கொவைட் 19 தீநுண்மி நாம் அண்மையில் சந்தித்த மிகப் பெரிய பாதிப்பு என்பதை யாரும் மறந்துவிட முடியாது. சீனாவின் வூஹானில் முதன்முதலாக உருவான இந்தத் தீநுண்மிக்கான காரணம் வன அழிப்பு. 2001-க்கும் 2025-க்கும் இடையே வூஹான் பகுதி காடுகளில் 34% மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன.

ஆங்காங்கே பல லட்சம் மரக்கன்றுகள் நட்டு, சமூகநலக் காடுகள் உருவாக்கினாலும் அவை இயற்கையான காடுகளுக்கு மாற்றாகி விடாது.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்.

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

திருக்குறள் (எண் 429) அதிகாரம்: அறிவு உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments