FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறுமதியாளரின் பொய்யுரை!

பயங்கரவாதத்துக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தும் முயற்சியை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும்.

30 September 2026, 1:51 am IST
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் - AP
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; அது தொடர்பான விவகாரத்தை சர்வதேச அரங்குகளில் எழுப்ப அனுமதியில்லை என்பது இந்தியாவின் தெளிவான, உறுதியான நிலைப்பாடு. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அரங்குகளில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்ச்சியாக எழுப்பி வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்திலும் இந்த பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு கடுமையான பதிலடி தந்திருக்கிறது இந்தியா.

ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமர்வில் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி பேசிய ஷாபாஸ் ஷெரீஃப், ஓராண்டுக்கு முன்பு 'இந்தியாவின் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை' எதிர்கொண்டபோது, ஐ.நா. சபை சாசனத்தின் 51-ஆவது பிரிவின் கீழ் தனக்குள்ள தற்காப்பு உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாகவும், அணு ஆயுத வலிமை கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே முழு அளவிலான போர் மூள்வதைத் தடுத்ததில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீடு முக்கியப் பங்காற்றியதாகவும் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 2025, ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் குதிரை சவாரி தொழிலாளி ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) காரணம் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் கண்டறிந்தது. இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலையே 'வெளிநாட்டு ஆக்கிரமிப்பு' என ஐ.நா. பொதுச் சபையில் குறிப்பிட்டார் ஷாபாஸ் ஷெரீஃப்.

Advertisement

Advertisement

பாகிஸ்தான் பிரதமர் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா நிறுத்திவைத்துள்ள சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் குறிப்பிட்டு பேசினார். ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதற்கான இந்தியாவின் ஒருதலைபட்சமான முடிவுக்கு எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.

1960-ஆம் ஆண்டு கையொப்பமான சிந்து நதிநீர் ஒப்பந்த ஆவணங்களின்படி இதை நிறுத்திவைப்பதற்கான விதிகள் இல்லை யென்றாலும், தேசப் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க அதிகாரம் உள்ளது என்ற இந்தியாவின் கூற்றை ஷாபாஸ் ஷெரீஃப் மறைத்துவிட்டார்.

தெற்காசியாவில் அணு ஆயுத மோதல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய காஷ்மீர் விவகாரத்துக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும்; ஐ.நா. சபையின் மேற்பார்வையிலான மக்கள் வாக்கெடுப்புக்காக காஷ்மீர் மக்கள் எட்டு தசாப்தங்களாகக் காத்திருக்கிறார்கள் என்றும் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினார். இதற்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகச் செயலர் பெடல் கெலாட் மிகக் கடுமையான பதிலடியைத் தந்தார். மீண்டும் மீண்டும் பொய்யான கூற்றுகளை வலியுறுத்துவதால் அவை உண்மையாகிவிடாது என்பதுதான் கெலாட் அளித்த பதிலின் சாராம்சம்.

'இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாகும். அது அப்படியே நீடிக்கும். காஷ்மீரைப் பற்றி பேச வேண்டுமெனில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே பேச வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் படுகொலைகள், காட்டுமிராண்டித்தனமான வன்முறை, அடிப்படை உரிமைகள் மறுப்பு குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டுப் பாருங்கள்' என பெடல் கெலாட் அளித்த பதிலின் மூலம், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் அவலங்கள் சர்வதேச அரங்கில் வெளிப்பட ஷாபாஸ் ஷெரீஃபே காரணமாகிவிட்டார்.

'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நீண்டகாலமாக ஊக்குவித்து வருகிறது. எனினும், பயங்கரவாதிகள் எங்கும் பதுங்க முடியாது என்பதை இந்தியா கடந்த ஆண்டு (ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம்) எடுத்துக் காட்டியது. பயங்கரவாதத்துக்கு எதிராக எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை நிலைநாட்டப்படும். பயங்கரவாதம் தொடர்ந்தால் பாகிஸ்தான் பின்விளைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' எனவும் ஐ.நா. பொதுச் சபையில் இந்திய பிரதிநிதி எச்சரிக்கை விடுத்தார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது. 1971 இந்தியா-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து, 1972, ஜூலையில் இரு நாடுகளுக்கும் இடையே சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் அதிபர் ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் அதில் கையொப்பமிட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும். இதில் மூன்றாம் தரப்பினருக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

சிம்லா ஒப்பந்தத்தை மீறி ஐ.நா. சபை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், இஸ்லாமிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் தொடர்ச்சியாக முயன்று வருகிறது. ஆனால், தனது நயதந்திர உத்திகளால் இந்த முயற்சியை இந்தியா முறியடித்துக் கொண்டே வருகிறது. பயங்கரவாதத்துக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தும் முயற்சியை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும்.

செறுவார்க்குச் சேண்இசுவா இன்பம் அறிவுஇலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.

அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் நிற்கும்.

திருக்குறள் (எண் 869) அதிகாரம்: பகை மாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments