அரசு விளம்பரங்களில் தலைவர்கள் பட விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
அரசு விளம்பரங்களில் ஆளுநர், முதல்வர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற அனுமதி கோரி
அரசு விளம்பரங்களில் ஆளுநர், முதல்வர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற அனுமதி கோரி தமிழகம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவுக்கு மத்திய அரசு, "காமன்காஸ்' என்ற பொதுநல அமைப்பு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மாநில அரசுகள் தாக்கல் செய்த மறுஆய்வு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி. கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது சில மாநிலங்கள் சார்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகவில்லை. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "மாநில அரசுகளின் மனுக்களுக்கு மத்திய அரசு, இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்திருந்த "காமன்காஸ்' என்ற பொதுநல அமைப்பு ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து மறுஆய்வு மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கமாக உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை நீதிபதிகள் தங்கள் அறையில் வைத்து விசாரிப்பதே மரபாகும்.
இந்நிலையில், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மனுவை நீதிமன்ற அறையில் நீதிபதிகள் திங்கள்கிழமை விசாரித்தனர். அப்போது, இந்த மறுஆய்வு மனுவை விசாரிக்கும் (நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி. கோஸ் இடம்பெற்ற) தற்போதைய அமர்வே இந்த விவகாரத்தை விசாரிக்க அனுமதிக்கும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும் என்று நீதிபதிகள் திங்கள்கிழமை குறிப்பிட்டனர்.
முன்னதாக, மத்திய அரசு விளம்பரங்கள் தொடர்பான நடைமுறைகளை உருவாக்குவதற்காக மூத்த பேராசிரியர் என்.ஆர். மாதவன் மேனன் தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளை கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஆய்வு செய்த நீதிமன்றம், "அரசு விளம்பரங்களில், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீங்கலாக வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பெறக் கூடாது' எனக் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த கட்டுபபாட்டை தளர்த்தி மாநில ஆளுநர், முதல்வர் ஆகியோரின் படங்களை அரசு விளம்பரங்களில் அச்சடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.