இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு: அன்சாரியின் கருத்துக்கு பாஜக கண்டனம்
இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவி வருவதாக குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஹமீது அன்சாரி கூறியுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவி வருவதாக குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஹமீது அன்சாரி கூறியுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவுகிறது என்று ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருக்கும் ஒருவர் இதுபோன்ற மலிவான கருத்தைக் கூறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரது அந்தக் கருத்தை கண்டிக்கிறோம். ஓய்வுக்குப் பிறகு அரசியல் அடைக்கலம் தேடும் வகையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறவிருக்கும் நிலைமையில் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தாலும், அவர் இதுவரை மாண்புக்குரிய குடியரசுத் துணைத் தலைவர் பதவியில்தான் இருக்கிறார் என்பதை மறந்திருக்கக் கூடாது என்றார் கைலாஷ் விஜயவர்கியா.
குடியரசுத் துணைத் தலைவராக ஐந்து ஆண்டுகள் இருந்த ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் (ஆக. 10) நிறைவுற்றது. இந்த நிலையில், புதன்கிழமை அவர் கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்களுடனான இணக்கச் சூழல் தற்போது அச்சுறுத்தலில் இருப்பதாகவும், இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவி வருவதாகவும் கூறியிருந்தார்.
பாஜக ஆட்சியில் பசுப் பாதுகாவலர்களால் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழலில் ஹமீது அன்சாரி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.