திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மறைப்பது ஏன்?: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி
'திரும்பப் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மறைப்பது ஏன்?' என்று மக்களவையில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் வியாழக்கிழமை
'திரும்பப் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மறைப்பது ஏன்?' என்று மக்களவையில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் வியாழக்கிழமை கேள்வியெழுப்பின.
இதுகுறித்து 2016-ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத் திருத்த மசோதா குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் கே.வி. தாமஸ் கூறியதாவது:
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக மத்திய அரசு அறிவித்து 8 மாதங்கள் கடந்த பிறகும், எத்தனை ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை இன்னும் எண்ணிக்கொண்டே இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு வெளியாகி 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், எவ்வளவு பணம் திரும்பி வந்தது என்பதையே மத்திய அரசு மறைப்பது ஏன்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகதா ரே கூறுகையில், 'ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு எத்தனை ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது என்பதை அறிய ஆவலாக உள்ளோம். ஆனால், ரிசர்வ் வங்கி ஆளுநரால் அதற்கு இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை' என்றார்.
புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
அந்த நோட்டுகளை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் திரும்பச் செலுத்தி, செல்லுபடியாகக் கூடிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின் மூலம், ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து ஒழிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.